மணிப்பூரில் பாஜக கூட்டணிக்கான ஆதரவை வாபஸ் பெற்றார் நிதீஷ் குமார்!
வயநாடு நிலச்சரிவு: மாயமான அனைவரையும் உயிரிழந்தவர்களாக அறிவித்தது கேரள அரசு!
இந்திய பேரிடர் வரலாற்று பெருந்துயர்களில் ஒன்றாக கருதப்படும் வயநாடு நிலச்சரிவு ஏற்பட்டு 6 மாதங்கள் ஆகின்றன. புஞ்சிரி மட்டத்தில் தொடங்கி முண்டகையைத் தாண்டி பல கிலோமீட்டர் தொலைவிற்கு நீண்டு கிடக்கும் இடிபாடுகள் அகற்ற முடியாத வடுவாக காட்சியளிக்கிறது. மனிதர்கள் வாழ தகுதியற்ற இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான உயிர்களை காவு வாங்கிய இந்த பேரிடரில் பலரின் உடல்களை அடையாளம் காணவோ உரிமை கோரவோ கூட ஆட்கள் இல்லை என்பது வேதனையின் உச்சம்.
நிலச்சரிவில் பலர் மாயமாகியிருந்த நிலையில், அவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. உறவினர்களின் புகார்கள், காவல்துறை மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் அளித்த பெயர் பட்டியலின் அடிப்படையில் பலரையும் தேடி வந்தனர். கிட்டத்தட்ட கடந்த 5 மாதங்களாகும் மேலாக எந்த முன்னேற்றமும் இல்லை என்பதால் மாயமான அனைவரையும் உயிரிழந்தவர்களாக தற்போது அறிவித்திருக்கிறது கேரள அரசு.
இதன் பின்னணி குறித்து தெரிவித்த வயநாடு வருவாய்த்துறை அதிகாரிகள், "நிலச்சரிவில் உறவினர்கள் மற்றும் உடைமைகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு, முழுமையான மறுவாழ்வு அளிக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காயம்பட்டவர்கள் பலரும் மெல்ல மீண்டு வருகின்றனர். மாயமான 32 நபர்களை தேடி வந்தோம். எந்த முன்னேற்றமும் இல்லை. அவர்கள் உயிர் பிழைத்திருப்பதற்கான வாய்ப்புகள் அரிதான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
எனவே 32 பேரையும் உயிரிழந்தவர்களின் பட்டியலில் சேர்த்திருக்கிறார்கள். இதன் மூலம் சம்பந்தப்பட்ட உறவினர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு நிவாரண உதவிகள், வீடுகள் போன்றவை வழங்க முடியும். இதன் காரணமாகவே உயிரிழந்தவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது. மரண சான்றிதழ்கள் விரைவில் வழங்கப்படும்" என்றனர்.