I won't miss any of Soubin and Suraj Venjaramoodu's movies! - Gautam Vasudev Men...
உயிரைக் காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுநரை சந்தித்த சைஃப் அலிகான்!
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆவதற்கு முன்னதாக தனது உயிரைக் காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுநரை நேரில் சந்தித்து சைஃப் அலிகான் நன்றி தெரிவித்தார்.
மும்பையில் கடந்த 16-ஆம் தேதி அதிகாலை சைஃப் அலி கான் வீட்டுக்குள் புகுந்த ஷரீஃபுல், நடிகரை 6 முறை கத்தியால் குத்திவிட்டு தப்பினாா். படுகாயமடைந்த சைஃப் அலி கானை வீட்டுப் பணியாளா்கள் மீட்டு, ஆட்டோவில் ஏற்றி பாந்த்ரா பகுதியில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதித்தனா்.
அவருடைய தண்டுவடத்தில் சிக்கியிருந்த 2.5 அங்குல நீளமுள்ள கத்தியின் உடைந்த பகுதி, அவசர அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.
இதையடுத்து 5 நாள்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்த சைஃப் அலிகான் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் வீடு திரும்பினார்.
அதற்கு முன்னதாக தனது உயிரைக் காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுநர் பஜன் சிங் ராணாவை மருத்துவமனைக்கு நேரில் வரவழைத்து சைஃப் அலிகான் நன்றி தெரிவித்துள்ளார்.
சைஃப் அலிகான் ஆட்டோ ஓட்டுநரை நேரில் சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இதனிடையே, சைஃப் அலிகானை லீலாவதி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது ஆட்டோ ஓட்டுநர் எவ்வித பணமும் வாங்கவில்லை எனக் கூறப்படுகிறது.
குற்றவாளி கைது
சைஃப் அலி கானை கத்தியால் குத்திய ஷரீஃபுலை மூன்று நாள் தீவிர தேடுதல்களுக்குப் பிறகு, மும்பைக்கு அடுத்து உள்ள தாணே நகரின் புறநகா் வனப்பகுதியில் பதுங்கியிருந்தபோது காவல் துறையினா் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
ஷரீஃபுல் தனது பெயரை விஜய் தாஸ் என மாற்றிக் கொண்டு வங்கதேசத்திலிருந்து டாக்கி நதி வழியாக 7 மாதங்களுக்கு முன் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.