வரலாறு படைத்த பென் டக்கெட்; ஆஸ்திரேலியாவுக்கு 352 ரன்கள் இலக்கு!
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 351 ரன்கள் எடுத்துள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் லாகூரில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இங்கிலாந்து முதலில் விளையது.
வரலாறு படைத்த பென் டக்கெட்
இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக பில் சால்ட் மற்றும் பென் டக்கெட் களமிறங்கினர். பில் சால்ட் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின் களமிறங்கிய ஜேமி ஸ்மித் 15 ரன்களில் ஆட்டமிழக்க, பென் டக்கெட் மற்றும் ஜோ ரூட் இருவரும் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அபாரமாக விளையாடியது.
நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 78 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் அடங்கும். தொடக்கம் முதலே சீரான இடைவெளிகளில் பவுண்டரிகளை விரட்டி விளையாடிய பென் டக்கெட் 95 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். ஒருநாள் போட்டிகளில் பென் டக்கெட் அவரது மூன்றாவது சதத்தைப் பதிவு செய்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பென் டக்கெட்டின் இரண்டாவது சதம் இதுவாகும்.
இங்கிலாந்து அணியின் மற்ற வீரர்கள் ஹாரி ப்ரூக் 3 ரன்கள், கேப்டன் ஜோஸ் பட்லர் 23 ரன்கள், லியம் லிவிங்ஸ்டன் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து அணி விக்கெட்டுகளை இழந்தபோதிலும், பென் டக்கெட் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அதிரடியாக விளையாடிய அவர் 143 பந்துகளில் 165 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 17 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.
இன்றையப் போட்டியில் 165 ரன்கள் எடுத்ததன் மூலம் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்டில் பென் டக்கெட் வரலாறு படைத்துள்ளார். பென் டக்கெட் குவித்த 165 ரன்களே சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரலாற்றில் தனிநபர் ஒருவரால் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இதற்கு முன்னதாக, ஆஸ்திரேலிய வீரர் நாதன் ஆஸ்ட்லே கடந்த 2004 ஆம் ஆண்டு 145 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.
இறுதியில் இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 351 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியா தரப்பில் பென் துவார்ஷூயிஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆடம் ஸாம்பா மற்றும் மார்னஸ் லபுஷேன் தலா இரண்டு விக்கெட்டுகளையும், மேக்ஸ்வெல் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
352 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி களமிறங்குகிறது.