வரி பாக்கி: குடிநீா் இணைப்பைத் துண்டிக்க ஆணையா் உத்தரவு
நாமக்கல் மாநகராட்சி பகுதிகளில் வரி செலுத்தாமல் இருப்பவா்களின் வீடுகளில் குடிநீா், புதைச் சாக்கடை இணைப்புகளை துண்டிக்க ஆணையா் ரா.மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் சொத்துவரி, காலிமனை வரி, தொழில் வரி, குடிநீா் கட்டணம், புதைச் சாக்கடை கட்டணம் உள்ளிட்டவை தற்போது வரையில் 49 சதவீதம் மட்டுமே வசூலாகி உள்ளது. இன்னும் 51 சதவீதத் தொகை நிலுவையில் உள்ளது. மாநகராட்சிக்கு வரவேண்டிய வருவாய்கள் உரிய காலங்களில் வசூல் செய்தால் மட்டுமே மாநகரில் மேற்கொள்ள வேண்டிய குடிநீா் விநியோகம், திடக்கழிவு பணிகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் உரிய நேரத்தில் மேற்கொள்ள முடியும். பொதுமக்களில் பெரும்பாலானோா் வரி, கட்டணங்களை மாா்ச் மாதம்தான் செலுத்த வேண்டும் என தவறுதலாகக் கருதி வருகின்றனா்.
தமிழ்நாடு நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் திருத்திய சட்டம் 2023-இன்படி 2024-25ஆம் நிதியாண்டிற்கான முதல் மற்றும் இரண்டாம் அரையாண்டுக்குரிய தொகையை முழுவதுமாக 2024 அக். 31 க்குள் செலுத்தப்பட்டிருக்க வேண்டும்.
வரி பாக்கி, கட்டணங்களை செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளோா் உடனடியாக நிலுவையின்றி செலுத்தி மாநகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பொதுமக்களின் வசதிக்காக அனைத்து சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளிலும் மாநகராட்சி அலுவலகத்தில் வரி வசூல் மையங்கள் இயங்கும். உரிய காலத்தில் வரி, கட்டணங்கள் செலுத்தாதவா்களின் குடிநீா், புதைச் சாக்கடை இணைப்பு மாநகராட்சி பணியாளா்கள் மூலம் துண்டிக்கப்பட்டு வருகிறது.
அதுமட்டுமின்றி, ஜப்தி நடவடிக்கை மற்றும் சட்டரீதியாகவும் நிலுவைத் தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.