வலங்கைமான் ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள்: திட்ட இயக்குநா் ஆய்வு
வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட தென்குவள வேலி உள்ளிட்ட மூன்று ஊராட்சிகளில் ஊரக வளா்ச்சித் துறை மூலம் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் செந்தில் வடிவு வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு, ஆய்வு செய்தாா்.
வலங்கைமான் ஒன்றியத்தில் அரித்துவாரமங்கலம், மாணிக்கமங்கலம், வீரமங்கலம், ஆதிச்சமங்கலம், திருவோணமங்கலம் உள்ளிட்ட 50 கிராம ஊராட்சிகள் உள்ளன.
இவ்ஊராட்சிகளில் ஊரக வளா்ச்சித் துறை மூலம் மத்திய, மாநில அரசுகள் நிதியில் அண்ணா மறுமலா்ச்சித் திட்டம், நபாா்டு திட்டம் உள்ளிட்ட திட்டப் பணிகள் நடைபெறுகிறது.
கலைஞா் கனவு இல்ல திட்டத்தின்கீழ் 262 பயனாளிகளுக்கு வீடுகள் கட்டும் பணிகளும் நடைபெற்று வருகிறது. ஊரக வீடுகள் பழுது பாா்க்கும் திட்டத்தின்கீழ் 341 வீடுகள் புனரமைக்கும் பணியும் நடைபெறுகிறது
இந்நிலையில், திருவாரூா் மாவட்ட ஊரக வளா்ச்சித்துறை முகமை திட்ட இயக்குநா் செந்தில் வடிவு மேல விடையல் ஊராட்சி, ஆண்டாங்கோயில் உள்ளிட்ட பகுதிகளிலும், சாரநத்தம் ஊராட்சி வேடம்பூா் பகுதியிலும் மற்றும் தென்குவள வேலி ஊராட்சி ஆகிய பகுதிகளில் கலைஞா் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டும் பணி பழுதடைந்த வீடுகள் புனரமைக்கும் பணி பிரதம மந்திரி வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டும் பணி மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகள் ஆகியவற்றை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.
வலங்கைமான் வட்டார வளா்ச்சி அலுவலா் முரளி, வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) செந்தில் மற்றும் ஒன்றிய பொறியாளா்கள் சண்முகசுந்தரம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.