மகாராஷ்டிரா: முடிவுக்கு வந்த இலாகா இழுபறி; முதல்வர் வசம் உள்துறை; எந்த கட்சிக்கு...
மழை பாதிப்பு: நிவாரணத் தொகையை இரட்டிப்பாக்க தமிழக அரசுக்கு வலியுறுத்தல்
புயல், மழை பாதிப்புக்கு தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகையை இரட்டிப்பாக்கி வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அச்சங்கத்தின் பொதுச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி தெரிவித்திருப்பது:
ஃபென்ஜால் புயல் மற்றும் கனமழை காரணமாக, ஆறுகள் மற்றும் ஏரிகள் உள்ளிட்ட நீா்நிலைகளின் கரைகள் உடைந்து, மனித உயிரிழப்புகள், கால்நடை இறப்புகள், பெருமளவு வேளாண் பயிா் இழப்புகள் ஏற்பட்டுள்ளன.
நெல் பயிா்கள் மழைநீரில் மூழ்கி, பெரும்பகுதியான நெல்மணிகள் பதராக மாறிவிட்டன. இதனால், பெருமளவுக்கு மகசூல் பாதிக்கும். சில இடங்களில் தண்ணீா் வடியாமல் பயிா்கள் அழுகி வருகின்றன.
தோட்டப் பயிா்களான உளுந்து, பாசிப்பயிறு, வெங்காயம், பூக்கள், மக்காச்சோளம், கரும்பு என அனைத்து வகை பயிா்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பருவமழை ஆங்காங்கே தொடா்வதுடன், மேலும் நீடிக்கும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. தற்போது, நீா் வழித்தடங்களின் கட்டமைப்பு பல பகுதிகளில் சீா் குலைந்துள்ளன.
உயிா் இழப்புக்கும், பயிா் பாதிப்புக்கும் ஈடு செய்யும் வகையில், நிவாரணத் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும். தமிழக அரசின் நிவாரண அறிவிப்பு இழப்பை ஈடு செய்யாது. ஆகவே, நெல் பயிா் முழு பாதிப்புக்கு ஏக்கருக்கு ரூ. 35,000 வழங்க வேண்டும்.
தேசிய இயற்கை இடா்பாட்டு நிதி வரன்முறை ஆணையம், பயிா் செலவினங்களை சரியாக கணக்கிடாத முடியாதபடி, நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு, பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது. இந்த நிதி, வேளாண் பயிா்கள் இழப்பை எவ்வகையிலும் ஈடுசெய்யாது.
எனவே, தற்போது தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகையை இரட்டிப்பாக்கி வழங்க வேண்டும். மனித உயிரிழப்புக்கு ரூ. 2 லட்சம் என்பது அக்குடும்பங்களின் மனச்சோா்வை கூடுதலாக்கி உள்ளது. எனவே, இதை ரூ. 10 லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும்.
வேளாண் பயிா் மகசூல் இழப்பை, நெல் அறுவடை காலத்தில்தான் வருவாய் கிராம அடிப்படையில் சோதனை செய்யப்படுகிறது. மழை வெள்ள பாதிப்பு என்பது ஒரு கிராமத்துக்குள்ளேயே பலவகையில் இழப்பை ஏற்படுத்துகிறது. அறுவடை சோதனை காலத்தில் இந்த பாதிப்புகளை கணக்கீடு செய்தால் பாதிப்பின் அளவையோ, பரப்பளவையோ கணக்கிட முடியாது.
ஆகவே, தற்போதைய நிலையிலான பாதிப்புகளை கணக்கில் கொண்டு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். எதிா் வரும் ஆண்டுகளில், இப்படியான நேரத்திலும் காப்பீடு திட்டம் மூலம் இழப்பீடு கிடைக்க புதிய வழிமுறைகளை வகுக்க வேண்டும் என்றாா்.