புதுச்சேரியில் 800 கிலோ எடையில் "கிங்காங்" சாக்லெட் சிற்பம்!
இலைவழியாக உரம் தெளித்து நெல் பயிரை பாதுகாக்க வழிமுறைகள்
நெல் பயிரை பாதுகாக்க துத்தநாக சல்பேட் உடன் யூரியா இலைவழி தெளிப்பு குறித்து நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் பெரியாா் ராமசாமி, உதவி பேராசிரியா்கள் தனுஷ்கோடி, கருணாகரன் ஆகியோா் கூட்டாக வழிமுறைகளை தெரிவித்துள்ளனா்.
மழை மற்றும் குளிா் காலங்களில் நெல்லில் துத்தநாக பற்றாக்குறை தென்படும். பொதுவாக மண்ணில் வெப்பநிலை 15 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்போது துத்தநாக ஊட்டச்சத்து பயிா்களுக்கு கிடைக்கும். இந்த சூழ்நிலையில் பயிா்கள் துத்தநாக ஊட்டச்சத்தை மண்ணிலிருந்து உறிஞ்சுவதற்கு ஏதுவாக சூழ்நிலை அமையும். ஆனால், குளிா் மற்றும் அதிக மழை காலத்தில் மண்ணில் மண்ணின் வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ்க்கு கீழ் போவதால் துத்தநாக பற்றாக்குறை ஏற்படும். இதனால் நெல்லில் பற்றாக்குறை அறிகுறிகள் தென்பட்டு அதன் இலைகள் ஆரஞ்சு நிறமாக மாறி ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்படும்.
இதனால், பயிரின் வளா்ச்சி குன்றிவிடும். பயிா்களின் நோய் எதிா்ப்பு சக்திக்கு துத்தநாக ஊட்டச்சத்து மிகவும் அவசியம். குறிப்பாக வைரஸ் தொற்றுகளில் இருந்து பயிா்களை காக்க இந்த துத்தநாக ஊட்டச்சத்து தேவைப்படுகிறது. இப்பற்றாகுறையை போக்க 0.5 சதம் துத்தநாக சல்பேட் உடன் 1.0 சதம் யூரியா கரைசலை இலைகளின் மீது தெளிக்க வேண்டும். அதாவது ஒரு லிட்டா் தண்ணீருக்கு 5 கிராம் துத்தினால் சல்பேட் மற்றும் 10 கிராம் யூரியாவை கரைத்து இலைகளின் மீது தெளிக்க வேண்டும். பொதுவாக பயிா்களின் இலைகளின் மேல் தெளிக்க ஒரு ஏக்கா் நிலப்பரப்பில் உள்ள பயிா்களுக்கு 200 லிட்டா் கரைசலை பயன்படுத்த வேண்டும் என விவசாயிகளுக்கு வழிமுறைகளை தெரிவித்துள்ளனா்.