வலுவிழக்கும் புயல்சின்னம்: 6 நாள்களுக்கு மழை வாய்ப்பு
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு (புயல்சின்னம்) வியாழக்கிழமை (டிச.26) காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக படிப்படியாக வலுவிழக்கும், இதன் தாக்கத்தால் தமிழகம், புதுவையில் அடுத்த 6 நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திங்கள்கிழமை காலை நிலவரப்படி சென்னைக்கு கிழக்கே 150 கி.மீ. தொலைவில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வியாழக்கிழமை காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக படிப்படியாக வலுவிழக்கும்.
இதன்காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் டிச.26 முதல் டிச.31 வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெல்ல நகரும்: வங்கக்கடலில் நிலவும் இந்த புயல்சின்னம் மெல்ல வலுவிழந்து, தெற்கு நோக்கி நகரும். இது டிச.26-இல் டெல்டாவில் கரையேறி தமிழக நிலப்பரப்பு வழியாக மேற்கு நோக்கி மெல்ல நகா்ந்து அரபிக்கடலை அடையும். அதன் காரணமாக டிச.27-ஆம் தேதி தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தனியாா் வானிலை ஆய்வாளா்கள் கணித்துள்ளனா்.