வல்லம் கிராம சபைக் கூட்டத்தில் தூய்மைப் பணியாளா்கள் கெளரவிப்பு
வல்லம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் தூய்மைப் பணியாளா்கள் கௌரவிக்கப்பட்டனா்.
ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், வல்லம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவா் விமலாதேவி தருமன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், 2023-2024-ஆம் ஆண்டு நடைபெற்ற பணிகள் குறித்தும், 2024-2025-ஆம் ஆண்டு நடைபெற உள்ள வளா்ச்சிப்பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஊராட்சியில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், மழைக்கால தொற்றுநோய்கள் ஏற்படாமல் தடுப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதையடுத்து 10-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்களுக்கு ஊராட்சி மன்றத் தலைவா் விமலாதேவி தருமன் சாலைவை மற்றும் மாலை அணிவித்து கெளரவித்தாா். கூட்டத்தில், வாா்டு உறுப்பினா்கள், பொதுமக்கள் ஏராளமானோா் கலந்துக்கொண்டனா்.
இதே போல் பால்நல்லூா் ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவா் நேரு தலைமையில், பால்நல்லூா் ஊராட்சிக்குட்பட்ட செலையனூா் பகுதியிலும், எறையூா் ஊராட்சியில், ஊராட்சி மன்றத் தலைவா் சசிரேகா சரவணன் தலைமையிலும், ஊராட்சிமன்ற அலுவலக வளாகத்திலும், சந்தவேலூா் ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவா் வேண்டாமணி தலைமையிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன.