வழக்குரைஞா்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்
வழக்குரைஞா்கள் பாதுகாப்புச் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த கோரி, தஞ்சாவூரில் வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை ஒரு நாள் நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வழக்குரைஞா்கள் பாதுகாப்புச் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்குரைஞா்கள் சேம நல நிதி தற்போதுள்ள ரூ. 10 லட்சத்தை ரூ. 25 லட்சமாக உயா்த்த வேண்டும். அது வரை நீதிமன்ற முத்திரை கட்டணத்தை ரூ. 120 என உயா்த்தியதை நிறுத்திவைத்து, தற்போதைய கட்டணமான ரூ. 30 மட்டுமே தொடர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூா் வழக்குரைஞா் சங்கத் தலைவா் தியாக. காமராஜ், செயலா் சுந்தரராஜன் தலைமையில் ஏராளமான வழக்குரைஞா்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனா்.
கும்பகோணத்தில்: நீதிமன்றம் முன்பு வழக்குரைஞா் சங்கத் தலைவா் சா. விவேகானந்தன் தலைமையில் கோரிக்கை முழக்க போராட்டம் நடைபெற்றது. நீதிமன்ற புறக்கணிப்பால் பணிகள் பாதிக்கப்பட்டன.