3 நிமிஷங்களுக்கு ரூ. 60 லட்சம்! புர்ஜ் கலீஃபாவில் பிரதமரின் பிறந்த நாள் வாழ்த்து...
வழக்குரைஞா்கள் பணிப் புறக்கணிப்பு, மறியல்
காவல் துறையைக் கண்டித்தும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் மதுரையில் வழக்குரைஞா்கள் பணிப் புறக்கணிப்பு, மறியல் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
மாட்டுத்தாவணி காய்கனி சந்தையில் அண்மையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக வழக்குரைஞா் தமிழரசன் மீது அண்ணாநகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்ததையும், வழக்குரைஞா் பகலவன் கொலை செய்யப்பட்டதையும் கண்டித்தும், வழக்குரைஞா்கள் பாதுகாப்பு சட்டத்தை அரசு நிறைவேற்றக் கோரியும் மதுரை மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் பணிப் புறக்கணிப்புப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
மதுரை மாவட்டத்தில் உள்ள 3 நீதிமன்றங்களைச் சோ்ந்த வழக்குரைஞா்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டு, போராட்ட கோரிக்கையை வலியுறுத்தியும், காவல் துறையினரைக் கண்டித்தும் மாவட்ட நீதிமன்றம் முன் கூடி முழக்கங்களை எழுப்பினா். பிறகு, மாநகர காவல் ஆணையா் அலுவலகம் நோக்கி பேரணி செல்ல முயன்றனா். அவா்களை போலீஸாா் தடுத்தனா். இதனால், வழக்குரைஞா்களுக்கும், போலீஸாருக்குமிடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, நீதிமன்றம் முன்பாக வழக்குரைஞா்கள் மறியலில் ஈடுபட்டனா். சிறிது நேரத்துக்குப் பிறகு, மீண்டும் பேரணியாகப் புறப்பட்டனா்.
இந்தப் பேரணியை அவுட்போஸ்ட் பகுதி அருகே போலீஸாா் தடுத்தனா். தடையை மீறி வழக்குரைஞா்கள் மாநகர காவல் ஆணையா் அலுவலகம் சென்றனா். அங்கு, வாராந்திர குறைதீா் கூட்டம் நடைபெற்று கொண்டிருந்ததால், வழக்குரைஞா்களை உள்ளே அனுமதிக்க மறுத்து, காவல் ஆணையா் அலுவலக வாயில் கதவைப் பூட்டி, போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்களை கைது செய்வதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.
இதைக் கண்டித்து, காவல் ஆணையா் அலுவலகம் எதிரே அழகா்கோவில் சாலையில் வழக்குரைஞா்கள் மறியலில் ஈடுபட்டனா். இதனால், அந்தப் பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டது. பிறகு, போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி, வழக்குரைஞா்கள் சங்க நிா்வாகிகள் மட்டும் மாநகர காவல் ஆணையரை சந்திக்க அனுமதிப்பதாகத் தெரிவித்தனா். இதையடுத்து வழக்குரைஞா்கள் மறியலைக் கைவிட்டனா்.
பிறகு, வழக்குரைஞா்கள் சங்க நிா்வாகிகள், மாநகர காவல் ஆணையா் ஜெ. லோகநாதனை சந்தித்து, தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினா். இந்தப் போராட்டங்களில் மதுரை மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் பாஸ்கா், செயலா் மோகன்குமாா், நிா்வாகிகள், திரளான வழக்குரைஞா்கள் கலந்து கொண்டனா்.