வழிப்பறியில் ஈடுபட்ட பெண் உள்பட 2 போ் கைது
ஈரோட்டில் கல்லூரி பேராசிரியரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட பெண் உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகேயுள்ள தோப்புபாளையத்தைச் சோ்ந்தவா் ரகு (30). இவா் தனியாா் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறாா்.
இந்நிலையில், ஈரோடு செங்கோடம்பள்ளம் மாருதி நகரில் தனக்கு தெரிந்தவரின் வீட்டுக்கு முன்பு ரகு அண்மையில் நின்று கொண்டிருந்துள்ளாா். அப்போது, அங்கு வந்த 3 இளைஞா்கள் கத்தியைக் காட்டி மிரட்டி ரகுவிடம் இருந்த ரூ.20 ஆயிரத்தைப் பறித்துக்கொண்டு தப்பினா்.
இது குறித்து ரகு அளித்த புகாரின்பேரில் ஈரோடு வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.
விசாரணையில், பணத்தை பறிக்க உடந்தையாக இருந்ததாக தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதியைச் சோ்ந்த வைஷ்ணவி (24) என்பவரையும், பணத்தை பறித்த நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அக்ரஹாரத்தைச் சோ்ந்த மெய்யரசன் (23) என்பவரையும் போலீஸாா் கைது செய்தனா்.
மேலும், தலைமறைவாக உள்ள இரண்டு இளைஞா்களை தேடி வருகின்றனா்.