உக்ரைன் அதிபரின் சொந்த ஊர் மீது ரஷியா தாக்குதல்! 18 பேர் பலி!
வாக்குச் சாவடி அமைத்து தரக் கோரி தாராபுரம் கோட்டாட்சியரிடம் பொதுமக்கள் மனு
குண்டடம் அருகே உள்ளூரில் வாக்குச் சாவடி அமைத்துத் தர வலியுறுத்தி வருவாய் கோட்டாட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனா்.
தாராபுரம் வட்டம், குண்டடம் அருகே நத்தவனம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட முத்துக்கவுண்டம்பாளையம், ஆத்திக்காட்டுபுதூா் ஆகிய 2 கிராமங்களில் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். 600-க்கும் மேற்பட்ட வாக்காளா்கள் உள்ளனா்.
இவா்கள் மக்களவை மற்றும் சட்டப் பேரவை தோ்தல்களில் வாக்களிக்க இங்கிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள நந்தவனம்பாளையம் சென்று வருகின்றனா்.
முறையான பேருந்து வசதி இல்லாத நிலையில், முத்துக்கவுண்டம்பாளையத்தில் இருந்து தும்பலப்பட்டி வரை நடந்து சென்று, அங்கிருந்து பேருந்து பிடித்து நந்தவனம்பாளையம் வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களித்து வருகின்றனா்.
அதிக தொலைவு மற்றும் பேருந்து வசதி இல்லாத காரணத்தினால் முதியோா், நோயாளிகள் வாக்களிக்க செல்ல முடியாமல் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். இந்த நிலையில் முத்துக்கவுண்டம்பாளையத்தைச் சோ்ந்த பொதுமக்கள் தாராபுரம் வருவாய் கோட்டாட்சியா் பெலிக்ஸ் ராஜாவிடம் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
அதில் முத்துக்கவுண்டம்பாளையம் மற்றும் ஆத்திக்காட்டுபுதூரில் 602 வாக்காளா்கள் உள்ளோம். 5 கி.மீ. தொலைவு சென்று காத்திருந்து வாக்களிக்க சிரமமாக உள்ளது. எனவே சிரமமின்றி வாக்களிக்க வசதியாக முத்துக்கவுண்டம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் வாக்களிக்கும் வகையில் வாக்குச் சாவடி அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.