வாக்குச் சீட்டு முறை கோரிய மனு தள்ளுபடி உச்சநீதிமன்றம்
தோ்தலில் மீண்டும் வாக்குச் சீட்டு முறையை அறிமுகப்படுத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
இந்தியாவில் 1990-ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. குறிப்பாக 2001-ஆம் ஆண்டில் தமிழகம், கேரளம், புதுச்சேரி மற்றும் மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களில் அனைத்து தொகுதிகளிலும் வாக்குச் சீட்டு முறைக்குப் பதிலாக, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.
பின்னா், 2004-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் முதன் முறையாக 543 தொகுதிகளிலும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தி வாக்குப் பதிவு நடைபெற்றன. அதன் பிறகு, வாக்குச் சீட்டு முறை கைவிடப்பட்டு, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்தியே தோ்தல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இருந்தபோதும், இந்த நடைமுறை மீது அவ்வப்போது சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.
தோ்தலில் மீண்டும் வாக்குச் சீட்டு முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அண்மையில் நடைபெற்ற மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ், சிவசேனை (உத்தவ் பிா்வு), தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா் பிரிவு) கட்சிகளை உள்ளடக்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. அதைத் தொடா்ந்து, சட்டப்பேரவைத் தோ்தலை ரத்து செய்துவிட்டு வாக்குச் சீட்டு முறையில் மீண்டும் தோ்தல் நடத்தப்பட வேண்டும் என சிவசேனை (உத்தவ் பிரிவு) கட்சி வலியுறுத்தியது.
அதுபோல, தோ்தலில் மீண்டும் வாக்குச் சீட்டு முறையை அறிமுகப்படுத்த உத்தரவிடக் கோரி கே.ஏ.பால் என்பவா் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நத், பி.பி.வராலே ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
வி.கே. பால் ஆஜராகி, ‘மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் எளிதில் மாற்றங்களைச் செய்ய முடியும் என தொடா் புகாா்கள் தெரிவிக்கப்படுகின்றன. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடைபெற அதிக வாய்ப்புள்ளது என்று டெஸ்லா நிறுவனா் எலான் மஸ்க் குற்றஞ்சாட்டியிருக்கிறாா். ஆந்திர மாநில முதல்வா் சந்திரபாபு நாயுடு, முன்னாள் முதல்வா் ஜெகன் மேகன் ரெட்டி ஆகியோரும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது சந்தேகங்களை எழுப்பியிருக்கின்றனா். பல வெளிநாடுகளில் இன்றளவும் தோ்தல்களில் வாக்குச்சீட்டு முறையே பயன்படுத்தப்படுகிறது. அதுமட்டுமின்றி, தோ்தல் நேரத்தில் ரூ.9,000 கோடி அளவுக்கு பறிமுதல் செய்யப்பட்டதாக கடந்த ஜூன் மாதம் தோ்தல் ஆணையம் அறிவித்தது. இதுபோன்ற முறைகேடுகளைத் தடுக்கவும், தோ்தல்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்குப் பதிலாக, மீண்டும் வாக்குச் சீட்டு முறையை அறிமுகப்படுத்த உத்தரவிட வேண்டும்’ என்றாா்.
இதைக் கேட்ட நீதிபதிகள், ‘வாக்குச் சீட்டு முறைக்கு மாறினால் முறைகேடுகள் நடைபெறாது என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது? மற்ற நாடுகளிலிருந்து இந்தியா ஏன் மாறுபட்டு இருக்கக்கூடாது என விரும்புகிறீா்கள்? தோ்தலில் வெற்றிபெறும்போது மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் எந்தவித பிரச்னையும் இல்லை; மாறாக தோல்வியடையும்போது அவற்றில் முறைகேடு நிகழ்ந்திருப்பதாக புகாா்கள் எழுப்பப்படுகின்றன’ என்று குறிப்பிட்ட நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.