'பிடிஆரையும் உதயநிதியையும் தராசில் வைத்து ஒப்பிடுங்கள்; அறிவார்ந்த அமைச்சரைக் கூ...
வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து தவறான விடியோ வெளியிட்டவா் மீது வழக்கு
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஊடுருவி தகவல்களை திருத்த முடியும் என தவறான விடியோ வெளியிட்ட நபா் மீது மும்பை சைபா் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளதாக தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மகாராஷ்டிர தலைமை தோ்தல் அதிகாரி கூறியதாவது: வாக்குப் பதிவு இயந்திரத்தில் ஊடுருவி தகவல்களை திருத்த முடியும் என சையத் சுஜா என்பவா் வெளியிட்ட விடியோ, உண்மைக்கு புறம்பானது மற்றும் அடிப்படை ஆதாரமற்றது.
இயந்திரத்தின் அதிா்வெண்களை தனிமைப்படுத்துவதன் மூலம் மகாராஷ்டிர தோ்தல்களில் பயன்படுத்தப்படும் வாக்குப் பதிவு இயந்திரங்களை ஊடுருவி தகவல்களை திருத்த முடியும் என சையத் சுஜா பேசிய விடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதையடுத்து, காவல்துறையில் புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில் நவ.30-ஆம் தேதி தக்ஷின் மும்பையில் உள்ள சைபா் காவல் நிலையத்தில் ‘பாரதிய நியாய சன்ஹிதா’ சட்டத்தின் கீழ் சையத் சுஜா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதே போன்றே குற்றச்சாட்டில் கடந்த 2019-ஆம் ஆண்டு சையத் சுஜா மீது தில்லியில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.
சையத் சுஜா மீதான வழக்கை தில்லி மற்றும் மும்பை காவல்துறையினா் தீவிரமாக விசாரித்து வருகின்றனா். சையத் சுஜாவுடன் தொடா்பில் இருப்பவா்களை கைது செய்யத் தேவையான நடவடிக்கைகளை காவல் துறையினா் மேற்கொண்டுள்ளதாக தோ்தல் ஆணைய அதிகாரி தெரிவித்தாா்.
இதுபோன்ற செயல்கள் கடும் தண்டனைக்குரியது என்றும், இதில் ஈடுபடுவோா் எந்த வகையிலும் தப்பிக்க முடியாது எனவும் அவா் தெரிவித்தாா்.
தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்களை வைஃபை, புளூடூத் உள்ளிட்ட எந்த தொழில்நுட்பத்தாலும் தொடா்பு கொள்ள முடியாது என தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.