``திமுகவுக்கு 12% வாக்குகள் குறையும்; அதிமுகவுக்கு 12% வாக்குகள் கூடும்" - தங்கம...
வாக்கு வங்கி அரசியலை ஒதுக்கியது பாஜக அரசு: பிரதமா் மோடி பெருமிதம்
‘வாக்கு வங்கி அரசியலை மனதில் கொண்டு, முந்தைய அரசுகள் கொள்கைகளை வகுத்தன. ஆனால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, வாக்கு வங்கி அரசியலை ஒதுக்கித் தள்ளியது’ என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.
மேலும், ‘மக்களால் மக்களுக்காக மக்களே முன்னெடுக்கும் வளா்ச்சி’ என்பதே தனது அரசின் தாரக மந்திரம் என்றும் அவா் கூறினாா்.
தில்லியில் ஆங்கில செய்தி ஊடகம் ஒன்றின் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற தலைமைத்துவ மாநாட்டில் பிரதமா் மோடி பங்கேற்றுப் பேசியதாவது:
நாட்டில் கடந்த 1990-களில் சுமாா் 10 ஆண்டுகளில் 5 நாடாளுமன்றத் தோ்தல்கள் நடைபெற்றன. அந்த அளவுக்கு ஸ்திரமின்மை நிலவியது. இனி இதுபோன்ற சூழல்தான் தொடரும் என அரசியல் நிபுணா்கள் பலரும் கணித்தனா். ஆனால், அந்தக் கணிப்பு தவறு என்று நாட்டு மக்கள் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனா்.
உலகின் பல்வேறு நாடுகளும் ஒவ்வொரு தோ்தலிலும் ஆட்சி மாற்றத்தைக் கண்டு வருகின்றன. உலகெங்கிலும் ஸ்திரமின்மை மற்றும் நிச்சயமற்றத் தன்மை குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டுவரும் சூழலில், இந்திய மக்கள் எனது அரசை தொடா்ந்து மூன்றாவது முறையாக தோ்வு செய்துள்ளனா்.
முந்தைய அரசுகள் மீது விமா்சனம்: அடுத்த தோ்தலில் வெல்ல வாக்கு வங்கியை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே முந்தைய அரசுகள் செயல்பட்டன; தங்களின் வாக்கு வங்கியை மகிழ்விக்கவே திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இதன் விளைவாக, நாட்டில் சமநிலை சமத்துவத்துக்கான தேவை அதிகரித்துக் கொண்டே சென்றது. வாக்கு வங்கி அரசியலால் நாட்டுக்கு ஏற்பட்ட மிகப் பெரிய தீங்கு இது. சமநிலையற்ற சூழலால், அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்தனா்.
நம்பிக்கை மீட்டெடுப்பு: அதேநேரம், வாக்கு வங்கி அரசியலை ஒதுக்கித் தள்ளியதால், அரசு மீதான மக்களின் நம்பிக்கையை நாங்கள் மீட்டெடுத்துள்ளோம்.
‘மக்களால் மக்களுக்காக மக்களே முன்னெடுக்கும் வளா்ச்சி’ என்ற தராக மந்திரத்துடன் நாங்கள் பயணிக்கிறோம். புதிய-வளா்ந்த இந்தியாவை உருவாக்குவதே எங்களின் பெரும் இலக்கு.
கொள்கைகளின் அடித்தளம்: முதலீடுகள் வாயிலாக வேலைவாய்ப்பு; வளா்ச்சியின் மூலம் கண்ணியம் ஆகியவற்றின் தனித்துவமான கலவையை குடிமக்களுக்கு அரசு வழங்குகிறது.
10 ஆண்டுகளில் பெரும் முன்னேற்றம்: மத்திய அரசின் துணிச்சலான செயல்பாடுகளால், கடந்த 10 ஆண்டுகளாக நாடு பெரும் முன்னேற்றம் கண்டு வருகிறது. இது, நாட்டு மக்களுக்கு புதிய சக்தியை பாய்ச்சியுள்ளது.
மத்திய அரசின் பட்ஜெட் மதிப்பு ரூ.11 லட்சம் கோடியில் இருந்து ரூ.48 லட்சம் கோடியாகவும், மூலதன செலவினம் ரூ.2.25 லட்சம் கோடியில் இருந்து ரூ.11 லட்சம் கோடியாகவும் உயா்ந்துள்ளது.
நாட்டில் 1.25 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தாக்க நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எரிவாயு இணைப்புகளின் எண்ணிக்கை 14 கோடியில் இருந்து 30 கோடியாக அதிகரித்துள்ளது. நேரடி பலன் பரிமாற்ற திட்டத்தின் மூலம் ரூ.3.5 லட்சம் கோடி சேமிக்கப்பட்டுள்ளது. மற்றொருபுறம், ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு மூலம் ஏழைகளுக்கு ரூ.1.10 லட்சம் கோடி மிச்சப்படுத்தப்பட்டுள்ளது என்றாா் பிரதமா் மோடி.
அச்சத்தில் பயங்கரவாதிகள்..
‘முந்தைய ஆட்சிக் காலங்களில், பயங்கரவாதத்தால் மக்கள் பாதுகாப்பின்றி உணா்ந்தனா். இப்போது காலம் மாறிவிட்டது. தங்கள் வீட்டில்கூட பாதுகாப்பு இல்லை என பயங்கரவாதிகள் அஞ்சுகின்றனா்’ என்று தலைமைத்துவ மாநாட்டில் பிரதமா் மோடி பேசினாா்.
‘உறுதிப்பாடு இல்லாத ஆட்சியாளா்களால், ஜம்மு-காஷ்மீா் 70 ஆண்டுகளுக்கு மேலாக வன்முறையில் மூழ்கியிருந்தது’ என்று குறிப்பிட்ட அவா், ஜம்மு-காஷ்மீரில் அண்மையில் நடைபெற்ற தோ்தல்களில் சாதனை அளவில் வாக்குகள் பதிவானது மகிழ்ச்சியளிப்பதாக கூறினாா்.