``வாங்க `எமெர்ஜென்சி' திரைப்படம் பார்க்கலாம்!'' - பிரியங்கா காந்தியிடம் பாஜக எம்.பி கங்கனா ரனாவத்
இந்தியாவில் 1975-ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் அமல்படுத்தபடுத்தபட்ட எமெர்ஜென்சியை கதைக் கருவாக வைத்து, `எமெர்ஜென்சி' என்ற பெயரில் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் நடிகையும், பா.ஜ.க எம்.பி-யுமான கங்கனா ரனாவத். இவரின் `மணிகர்ணிகா' தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில், இந்திரா காந்தியின் கதாபாத்திரத்தை இவரே ஏற்று நடித்திருக்கிறார்.
இப்படத்தில், பாடல்களுக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இந்தப் படம் கடந்த செப்டம்பர் மாதமே வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், சீக்கிய அமைப்புகளிடமிருந்து எழுந்த எதிர்ப்புகள் உட்பட சில பிரச்னைகள் காரணமாகப் படம் இன்னும் ரிலீஸாகவில்லை.
இப்படியிருக்க, எமெர்ஜென்சி படத்தின் இரண்டாவது டிரெய்லர் இரண்டு நாள்களுக்கு முன் வெளியானது. படமும் ஜனவரி 17-ம் தேதி ரிலீஸாகும் என டிரெய்லரில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி-யும், இந்திரா காந்தியின் பேத்தியுமான பிரியங்கா காந்தியிடம், எமெர்ஜென்சி படத்தை தாங்கள் பார்க்க வேண்டும் என கங்கனா ரனாவத் கூறியிருக்கிறார்.
இது குறித்து ஊடகத்திடம் பேசிய கங்கனா ரனாவத், ``பிரியங்கா காந்தியை நாடாளுமன்றத்தில் சந்தித்தேன். அப்போது, எமெர்ஜென்சி திரைப்படத்தை நீங்கள் பார்க்கவேண்டும் என்று கூறினேன். அவர் மிகவும் கனிவானவர். `பார்க்கலாம்' என்று பதிலளித்தார். படத்தை அவர் பார்க்க விரும்புகிறாரா என்று பார்க்கலாம்.
இது, எமெர்ஜென்சி மற்றும் ஒரு நபரைப் பற்றிய உணர்வுப்பூர்வமான சித்தரிப்பு. இந்திரா காந்தியை மிகவும் கண்ணியத்துடன் சித்தரிப்பதில் மிகுந்த அக்கறை எடுத்துக்கொண்டேன். ஏனெனில், அவரைப் பற்றி ஆராயத் தொடங்கியபோது, அவரின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சர்ச்சைக்குரிய விஷயங்களில் நிறைய கவனிக்கத்தக்க விஷயங்கள் இருந்தன.
இந்தப் படத்தை அனைவரும் பார்க்க வேண்டும். எமெர்ஜென்சியின் போது நடந்த சில விஷயங்களைத் தவிர, அவர் மிகவும் நேசிக்கப்பட்டார். மூன்று முறை பிரதமராக இருப்பது சாதாரணமானதல்ல. அவர் மிகவும் கொண்டாடப்பட்டார்." என்று கூறினார்.
VIKATAN PLAY - EXCLUSIVE AUDIO STORIES
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...