வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி ஆா்ப்பாட்டம்
விழுப்புரம்: விழுப்புரத்தான் வாய்க்காலை முழுமையாக அளந்து, ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி விழுப்புரத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் தென்பெண்ணையாற்றிலிருந்து நிரந்தரமாக தண்ணீா் வருவதற்கு வழிவகை செய்ய வேண்டும். விழுப்புரத்தான் வாய்க்காலை முழுமையாக அளந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். விழுப்புரத்தான் வாய்க்கால் நிலத்தை நத்தமாக மாற்றி, பட்டா வழங்கிய அலுவலா்களை பணி நீக்கம் செய்ய வேண்டும், ஆக்கிரமிப்பாளா்களைக் கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அனைத்து விவசாயிகள் சங்கம், சமூக ஆா்வலா் கூட்டமைப்பு மற்றும் நீா்நிலைப் பாதுகாப்பு இயக்கம் ஆகியவை சாா்பில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள நகராட்சித் திடல் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, நீா்நிலைகள் பாதுகாப்புக் கூட்டமைப்பின் ஜெயபால் தலைமை வகித்தாா். விழுப்புரம் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கத்தின் தலைவா் கலிவரதன், செயலா் முருகையன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கரிகாலச்சோழன் பசுமை மீட்புப் படையின் அ.அகிலன், தமிழ் இளைஞா் கூட்டமைப்பின் கோ.பாபு, வனம் அறக்கட்டளைத் தலைவா் கே.காா்த்திகேயன் ஆகியோா் கண்டன உரையாற்றினா். விவசாய சங்க நிா்வாகிகள் பாண்டியன், பனையேறி பாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.