Pope Francis: காலமானார் போப் பிரான்சிஸ்.. காஸா மக்களுக்காக கடைசியாக உதிர்த்த வார...
விசைத்தறியாளர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக திருப்பூர், கோவையில் கடைகள் அடைப்பு!
திருப்பூர்: விசைத்தறியாளர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக திருப்பூர், கோவை மாநகரங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
விசைத்தறியாளர்கள் மேற்கொண்டுவரும் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவாக கோவை மற்றும் திருப்பூர் புறநகரப் பகுதிகளில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. கடையடைப்பு போராட்டம் காரணமாக கோவை புறநகர பகுதிகளில் சாலைகள் பெரும்பாலும் வெறிச்சோடி காணப்படுகின்றன.
எதற்காக இந்த போராட்டம்?
மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, உதிரிபாகங்கள் விலை உயர்வுக்கு ஏற்ப, கூலி உயர்வு கோரி, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் விசைத்தறியாளர்கள் கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து போராடி வருகின்றனர்.
16 முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவிட்டன.., சோமனூர், தெக்கலூர் பகுதிகளில் ஆயிரக்கணக்கான விசைத்தறியாளர்களின் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியும் உள்ளனர்..,
150 கிராமங்களில் 10,000-க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்களில் கறுப்புக்கொடி ஏற்றுதல், மாவட்ட ஆட்சியர்களுடனான பேச்சுவார்த்தை என பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகும், ஜவுளி உற்பத்தியாளர்கள் கூலி உயர்வு வழங்க மறுப்பதாக விசைத்தறியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தநிலையில், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் சங்க கூட்டமைப்பின் முடிவின்படி, கடந்த மார்ச் 19-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மேலும், தமிழக முதல்வர் மற்றும் மாவட்ட நிர்வாகங்களின் கவனத்தை ஈர்க்க, கருமத்தம்பட்டி நகரில் கடந்த ஏப்ரல் 11 - 15-ஆம் தேதி வரை 5 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தையும் விசைத்தறியாளர்கள் முன்னெடுத்துள்ளனர்.
இந்தநிலையில், விசைத்தறியாளர்களின் இந்த போராட்டத்திற்கு ஆதரவாக, இன்று(ஏப். 15) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கோவை மற்றும் திருப்பூர் புறநகர் பகுதிகளான சோமனூர், சாமளாபுரம், காரணம்பேட்டை, கருமத்தம்பட்டி, தெக்கலூர், அவிநாசி, கண்ணம்பாளையம், புதுப்பாளையம், பெருமாநல்லூர் ஆகிய பகுதிகளில் முழு கடையடைப்புக்கு வியாபாரிகள் சங்கங்கள் மற்றும் விசைத்தறியாளர் சங்க கூட்டமைப்பு அழைப்பு விடுத்தன.
இதனைத் தொடர்ந்து இன்று காலை 6 மணி முதல், இப்பகுதிகளில் மருந்தகங்களைத் தவிர்த்து அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக இப்பகுதிகளில் பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. வாகன போக்குவரத்தும் கணிசமான அளவில் குறைந்தே காணப்படுகிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
இவ்விவகாரத்தில் தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தலையிட்டு, முத்தரப்பு பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண வேண்டுமெனவும், விசைத்தறித் தொழிலைப் பாதுகாக்க வேண்டுமெனவும் விசைத்தறியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.