ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் சஞ்சு சாம்சன் விளையாடவில்லை; காரணம் என்ன?
ஹோட்டல் உரிமம் வழங்க ரூ.3,000 லஞ்சம்; துப்புரவு ஆய்வாளருக்கு 11 வருடம் கழித்து 2 ஆண்டுகள் சிறை
கரூர் தான்தோன்றிமலையில் ரமேஷ்குமார் என்பவர் ஹோட்டல் நடத்தி வந்தார். இதற்கு உரிமம் பெற கடந்த 2014 - ம் ஆண்டு, அக்டோபர் மாதம் கரூர் நகராட்சியில் தான்தோன்றிமலை பிரிவு துப்புரவு ஆய்வாளரக அப்போது பணியாற்றி வந்த செல்வராஜை அணுகியுள்ளார். அப்போது, செல்வராஜ் ரூ.3,000 லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத ரமேஷ்குமார், திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து, ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் ஆலோசனைப்படி, 2014- ம் வருஷம், அக்டோபர் மாதம், 10-ம் தேதி ரமேஷ்குமார் ரூ.3,000 லஞ்ச பணத்தை கொடுத்தார். அதை செல்வராஜ் பெற்றபோது, ஊழல் தடுப்பு போலீஸார் அவரை கையும், களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.

அதனைத்தொடர்ந்து, கரூர் தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் சிறப்பு நீதிபதி என்.எஸ்.ஜெய பிரகாஷ் தீர்ப்பளித்தார். அந்த தீர்ப்பில், ஹோட்டல் நடத்தும் உரிமத்துக்காக ரூ 3000 லஞ்சம் கேட்ட செல்வராஜூக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அப்படி, அந்த அபராதத்தை செலுத்தத் தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். ஹோட்டல் உரிமத்துக்காக ரூ. 3000 லஞ்சம் வாங்கிய துப்புரவு ஆய்வாளருக்கு 11 வருடங்கள் கழித்து இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.