விடுதலையாகி ரீல்ஸ் விடியோ வெளியிட்ட நபர் மீண்டும் கைது!
மகாராஷ்டிரத்தில் சிறையிலிருந்து ஜாமினில் வெளியானவுடன் ரீல்ஸ் விடியோ வெளியிட்ட நபர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாக்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுமித் தாக்கூர் என்ற நபர் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதினால், மகாராஷ்டிரா திட்டமிட்ட குற்றத் தடுப்புச் சட்டம் (MCOCA) கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த சில மாதங்கள் சிறையில் கழித்த அவர் சமீபத்தில் ஜாமினில் வெளியே வந்ததுள்ளார்.
இதையும் படிக்க:ஆக்ஸ்போர்டு பல்கலையில் உரையாற்றும் முதல்வர் மமதா!
இதனைத் தொடர்ந்து, சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் அவர் சமூக வலைதளத்தில் ரீல்ஸ் விடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில், அவரது குற்றப்பின்னணி மற்றும் சிறையிலிருந்து விடுதலையானதைக் குறித்து பெருமையான வரிகள் இடம் பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்த அம்மாநில சைபர் காவல் துறையினர் அவரைக் கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.