உக்ரைனில் ஈஸ்டர் நாளில் மட்டும் போர் நிறுத்தம்: ரஷிய அதிபர் திடீர் அறிவிப்பு!
விருதுநகர் அரசுப்பள்ளி மாணவர்களின் எத்துப்பல் பிரச்னைக்கு தீர்வு - மாவட்ட நிர்வாகத்தின் புது முயற்சி
அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவ - மாணவிகளின் உடல்நலனை கருத்தில்கொண்டு, தமிழக பள்ளிக்கல்வித்துறையும், சுகாதாரத் துறையும் இணைந்து மருத்துவ முகாம்களை நடத்தி வருகின்றன. இந்த மருத்துவ முகாம்களின் மூலமாக, கண், காது, மூக்கு, தொண்டை, நுரையீரல் மற்றும் வயிறு சம்பந்தமான பொது பிரச்னைகளுக்கு ஆலோசனைகளும், தேவையான மருந்து மாத்திரைகளும் வழங்கப்படுகிறது.
ஆனால், தமிழகத்திலேயே முதல் முயற்சியாக விருதுநகர் மாவட்டத்தில், அரசுப்பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பல் சம்பந்தப்பட்ட நுணுக்கமான பிரச்னைகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் ஏற்பாட்டின்பேரில் இலவச மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டிருப்பது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஆட்சியர் ஜெயசீலன் சொல்வது என்ன?
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனிடம் பேசினோம். "என்னுடைய, பள்ளி ஆய்வின் போது ஒரு சில மாணவர்கள் சீரற்ற பல்வரிசையுடன் கூச்ச சுபாவத்துடன் பேசுவதை, சிரிப்பதை கவனித்தேன். உதட்டுபிளவு, இதய நோய் உள்ளிட்ட எந்த பிரச்னைகளையும் சரி செய்வதற்கு காப்பீட்டு திட்டமும் அரசு மருத்துவமனைகளில் வசதியும் இருக்கிறது. ஆனால் எத்து பல், தெத்துப்பல் பிரச்னைகளை சரி செய்வதற்கு எதுவும் இல்லை என்பதால், இது குறித்து பல் மருத்துவர்களுடன் கலந்து ஆலோசித்து இதை செயல்படுத்துவதற்கு திட்டம் வகுத்தோம்.
இது, மாணவர்களுக்கு எதிர்காலத்தில் தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது. எத்துப்பல்லால், பல் சொத்தை, பல் வளர்ச்சியின்மை, ஈறு பலவீனமடைதல், வாய் அழற்சி, சீரற்ற பல் வரிசை, தாடை வீக்கம், மஞ்சள் படிதல், அழகு சீர்கேடு போன்ற பல்வேறு பிரச்னைகள் உருவாகிறது.
அதேசமயம் 'எத்துப்பல்', சிலருக்கு தன்னம்பிக்கையை குறைக்கக்கூடிய பலவீனமாகவும் உணர்கின்றனர். அதேபோல, மாறுகண் பிரச்னையும் இதுபோன்ற பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியதுதான். ஆனால், இதுபோன்ற பிரச்னைகளுக்கு, மாணவர்களுக்கு மருத்துவ உதவி கிடைப்பதில் சிக்கல் உள்ளது. ஏனெனில், பொதுநோய் சிகிச்சைகளுக்கு மட்டுமே அரசு நிதி ஒதுக்கீட்டின்பேரில் இலவசமாக சிகிச்சைகள் வழங்கிட முடியும்.
இந்தநிலையில், அழகு சிகிச்சை வகைகளில் சேரும் இதுபோன்ற சிகிச்சைகளை மாணவர்கள் அவரவர் சொந்த செலவில்தான் செய்துகொள்ள முடியும். ஆனால் எத்துப்பல் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருக்கும் எல்லா மாணவர்களாலும் அதற்குரிய சிகிச்சையினை மேற்கொள்ள முடிவதில்லை. ஏனெனில் இந்த சிகிச்சைக்கு குறைந்தபட்சம் 25 ஆயிரம் முதல் அதிகபட்சமாக லட்சம் வரையிலும் கூட செலவாகும்.
ஆகவே, பொருளாதார ரீதியாக மாணவ-மாணவிகளின் குடும்பத்திற்கு சிரமங்கள் ஏற்படும் சூழல் உள்ளது. அதேசமயம், எத்துப்பல்லால் அநேக மாணவர்கள் மனரீதியாக வலுவிழந்து படிப்பில் கவனம் சிதறவிடுவதை கண்டறிந்தோம். பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்படும் மருத்துவ முகாம்களில் பிற தொற்று நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் அதேவேளையில் தங்களுக்கு இருக்கும் எத்துப்பல்லை நீக்குவதற்கும், மாறுகண் சரிசெய்வதற்கும் ஏதேனும் வழி உள்ளதா என மாணவர்களே நேரடியாக எங்களிடம் கேட்டனர். அப்போது, இந்த பிரச்னையை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு சிகிச்சை அளிப்பதென உறுதி எடுத்தோம்.

அதன்படி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துறைரீதியான ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. மாணவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த பிரச்னைகள் குறித்தும் அதன் பாதிப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இறுதியில் அந்தகூட்டத்தில், முதற்கட்டமாக எத்துப்பல் பிரச்னையால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க முடிவுசெய்யப்பட்டதுடன், இதற்கான திட்ட அறிக்கைகள் தயார் செய்து வழங்கும்படி உத்தரவிடப்பட்டது.
அதன்படி விருதுநகர் மாவட்டம் முழுவதும் அரசு பள்ளிகளில் பயின்று வரும் மாணவ மாணவிகளில் எத்துப்பல் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களை கணக்கெடுத்து அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு திட்ட மதிப்பீடும் செய்யப்பட்டது. மாணவர்களுக்காக மேற்கொள்ளப்படும் இந்த சிகிச்சைக்கு அரசிடம் இருந்து நிதிகோர முடியாதென்பதால் மாவட்ட நிர்வாகத்தின் சமூக சூழல்நிதி திட்டத்தின் கீழ் நிதிஉதவி பெற்று மாணவ மாணவிகளுக்கான சிகிச்சை செலவினை நேர் செய்ய நடவடிக்கை எடுத்தோம்.
எத்துப்பல் நீக்கம், பல் சீரமைப்பு மற்றும் அதன் தொடர் சிகிச்சை முறைகளுக்கு துறைரீதியாக நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள் நமது மாவட்டத்தில் குறைவு என்பதாலும், மாணவர்களுக்கான சிகிச்சை அளிப்பதற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் இங்கு நிறைவாக இல்லாததாலும் தனியாரை நாட வேண்டிய சூழல் ஏற்பட்டது. எனவே பல் மருத்துவ சிகிச்சையில் பிரபலமாக உள்ள சில தனியார் மருத்துவமனை நிர்வாக அதிகாரிகளுடன் மாணவ மாணவிகளுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக ஆன்லைனில் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது. அந்தக்கூட்டத்தில் மதுரையைச் சேர்ந்த பிரபல தனியார் மருத்துவமனை மாணவ-மாணவிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் சிகிச்சை அளிப்பதற்கு முன்வந்தது. மேலும் எக்ஸ்ரே, ஸ்கேன் மற்றும் சிகிச்சைக்கு பின்பான தொடர் செக்-அப் போன்றவற்றையும் இலவசமாக செய்துதர ஒப்புக்கொண்டது.
தொடர்ந்து, 'மலரும் புன்னகை' எனும் திட்டப்பெயரில் மதுரையைச் சேர்ந்த நளா தனியார் பல் மருத்துவமனையுடன், விருதுநகர் மாவட்ட நிர்வாகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டது. இதையடுத்து, 'மலரும் புன்னகை' திட்டத்தின்படி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 'எத்துப்பல்' பிரச்னையால் பாதிக்கப்பட்ட மாணவ-மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதற்கட்ட பரிசோதனையும், அதைத்தொடர்ந்து எத்துப்பல் நீக்கத்திற்கான சிகிச்சையும் செய்யப்பட்டது.
மாணவ மாணவிகள் சிகிச்சைக்காக சென்றுவரும் போக்குவரத்து செலவு, சாப்பாடு, அவர்களை உடனிருந்து கவனிப்பதற்கு பெற்றோர்களை அழைத்துச் செல்லுதல் என அனைத்துமே 'மலரும் புன்னகை' திட்டத்தின் கீழ் இலவசமாக செய்து கொடுத்தோம். புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, செத்துப் பல் நீக்கம், ஸ்கேன், எக்ஸ்ரே, ஃபாலோ அப் செக்அப் ஆகியவற்றை உள்ளடக்கி மாணவர் ஒருவருக்கு 12000 ரூபாய் சிகிச்சை செலவாக வழங்குகிறோம்.

தற்போது, இந்தத்திட்டத்தின் கீழ் மாவட்டம் முழுவதும் 600 மாணவ மாணவிகள் பயனடைந்துள்ளனர். அடுத்த முயற்சியாக, மாறுகண் பிரச்னையால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் அந்தத் திட்டமும் செயல்படுத்தப்படும்" என்றார்.