MP: சிறுத்தைக்குத் தண்ணீர் வைத்த 'வைரல் ஓட்டுநர்' சஸ்பெண்ட்; அதிகாரிகள் சொல்லும்...
Ooty: சிம்லாவை மிஞ்சும் ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை... எல்லாமே சிறப்புதான்!
ஊட்டியில் ரூ. 499 கோடி மதிப்பீட்டில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். மலைப்பிரதேசத்தில் நிறுவப்பட்ட இந்த மருத்துவமனையின் சிறப்பம்சங்களை பார்க்கலாம். மலை மாவட்டமான நீலகிரியில் அரசு மருத்துவக் கல்லூரி அமைய வேண்டும் என்பது அந்த மக்களின் நெடுங்கால கனவாக இருந்து வந்திருக்கிறது. பழங்குடிகள், தோட்ட தொழிலாளர்கள் என விளிம்பு நிலை மக்கள் நிறைந்த இந்த மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளே மருத்துவ தொண்டாற்றி வருகின்றன. பெரும்பாலான மக்கள் அரசு மருத்துவமனைகளை மட்டுமே சார்ந்துள்ளனர். உயர்தர மருத்துவம் என்பது எட்டாக்கனியாகவே இருந்து வந்தது. கோவை, கேரளா, பெங்களூரு போன்ற பகுதிகளை மட்டுமே மக்கள் சார்ந்திருந்த நிலையில், கோல்டன் ஹவர்ஸ் எனப்படும் நோயாளிகளை இறப்பில் இருந்து காப்பாற்றும் பொன்னான நேரத்தை பயணித்தில் செலவழிக்கும் அவலம் தொடர்ந்து வந்தது.

நீலகிரியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைய வேண்டும் என மக்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் மலையில் சாத்தியமில்லை, ஹெலி ஆம்புலன்ஸ் போன்ற மாற்றுத்திட்டமே பரிசீலனையில் இருந்தது. இந்த நிலையில் தான் நீலகிரி மாவட்டத்திற்கான அரசு மருத்துவக் கல்லூரியை ஊட்டியில் நிறுவப்போவதாக கடந்த 2019- ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. ஊட்டி நகருக்கு அருகில் உள்ள ஃபிங்கர் போஸ்ட் பகுதியில் நிலம் தேர்வு செய்யப்பட்டது.
தமிழக அரசின் வனத்துறைக்கு சொந்தமான 25 ஏக்கர் நிலமும், அருகில் கால்நடை பராமரிப்புத்துறைக்குச் சொந்தமான 15 ஏக்கர் நிலமும் தேர்வு செய்யப்பட்டது. வனத்துறை வழங்கிய நிலத்திற்கு மாற்றாக சேலம் மாவட்டம், வாழப்பாடியில் வருவாய்த்துறைக்கு சொந்தமான 50 ஏக்கர் நிலம் வனத்துறைக்கு ஈடாக வழங்கப்பட்டது.
ஊட்டியில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கான கட்டடங்கள் கட்ட ரூ.499 கோடி முதல்கட்ட நிதியாக ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த 2020 - ம் ஆண்டு ஜூலை மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. தொடர்ந்து பணிகள் நடைபெற்று வந்த நிலையில், 2022 - ம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரியை காணொளி வாயிலாக திறந்து வைத்தார். அதே ஆண்டில் மருத்துவம் பயிலும் மாணவர்களின் சேர்க்கையும் தொடங்கியது .

700 படுக்கைகளுடன் அனைத்து வசதிகளை உள்ளடக்கிய மருத்துவமனை கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
கொட்டும் கனமழை, நடுங்க வைக்கும் உறைபனி என இயற்கை இடர்களுக்கு மத்தியில் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வந்தனர். ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் தொடர் உழைப்பால் மருத்துவமனை கட்டுமான பணிகள் தற்போது முழுமையாக நிறைவடைந்திருக்கிறது. ரூ. 499 கோடி மதிப்பீட்டில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. சிம்லாவிற்கு அடுத்த படியாக மலைப்பிரதேசத்தில் அமையவுள்ள இரண்டாவது மருத்துவ கல்லூரி என்ற சாதனையை சாத்தியமாக்கியிருக்கிறார்கள்.
அதுமட்டுமின்றி மலைப்பிரதேசத்தில் 700 படுக்கைகள் கொண்ட நாட்டின் ஒரே அரசு மருத்துவமனை இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
எம்.ஆர்.ஐ , சி. டி ஸ்கேன், டிஜிட்டல் எக்ஸ்ரே போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களுடன், 10 அதிநவீன அறுவை சிகிச்சை அரங்கங்களும் அமைக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் பிரிவு, காசநோய் பிரிவு பல சிகிச்சை பிரிவுகளும் அமையப்பெற்றுள்ளது.

பழங்குடியினர்களுக்கு தனி வார்டு ஒன்று அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்ததைத் தொடர்ந்து, ஆண்கள், பெண்களுக்கு தலா 20 படுக்கைகள், குழந்தைகள் மற்றும் மகப்பேறுக்கென்று 10 படுக்கைகள் என மொத்தம் 50 படுக்கைகள் கொண்ட பழங்குடியினருக்கான தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
நாட்டிலேயே பழங்குடியினருக்கென 50 படுக்கைகளுடன் தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மலை மாவட்ட மக்களுக்கு மகத்தான மருத்துவ சேவையாற்றும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள் மக்கள்.