விருதுநகர்: பட்டாசு ஆலை வெடி விபத்து; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3-ஆக உயர்வு!
விருதுநகரை அடுத்த வச்சக்காரப்பட்டி காவல் எல்லைக்குட்பட்ட சின்னவாடி கிராமத்தில், சதானந்தபுரத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் (வயது 55) என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை, 'சத்யபிரபு ஃபயர் ஒர்க்ஸ் ஃபேக்டரி' எனும் பெயரில் செயல்பட்டு வருகிறது. நாக்பூர் லைசென்ஸ் பெற்று இயங்கும் இந்த பட்டாசு ஆலையில் சுமார் 20-க்கும் மேற்பட்ட அறைகளில், 60க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்துவருகின்றனர். கடந்த 5-ம் தேதி வழக்கம்போல, பட்டாசு ஆலையில் பேன்சி ரக பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, மதிய உணவு இடைவேளைக்காக தொழிலாளர்கள் அனைவரும் அறைகளில் இருந்து வெளியேறிய நிலையில், எதிர்பாராதவிதமாக வெடி மருந்தில் ஏற்பட்ட உராய்வு காரணமாக பட்டாசு ஆலையில் வெடி விபத்து நடந்தது. இந்த வெடி விபத்தில் பட்டாசு ஆலையில் 4 அறைகள் தரைமட்டமாயின. 6 அறைகள் தீக்கிரையாகின.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-13/rys7w8ni/IMG-20250212-WA0007.jpg)
இடிபாடுகளில் சிக்கி வதுவார்பட்டியை சேர்ந்த ராமலட்சுமி (வயது 50) என்பவர் உடல் கருகி பலியானார். மேலும் அதிவீரன்பட்டியைச் சேர்ந்த வீரலட்சுமி, வைத்தீஸ்வரி, கஸ்தூரி (31), பொம்மையாபுரத்தைச் சேர்ந்த முருகேஸ்வரி (55), ஆவூடையாபுரத்தைச் சேர்ந்த பெண் தொழிலாளி மாணிக்கம் (54) மற்றும் மீனம்பட்டியைச் சேர்ந்த சைமன் டேனியல் ஆகியோரும் படுகாயம் அடைந்தனர். இந்தச் சம்பவம் குறித்து வச்சக்காரப்பட்டி போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வந்தனர்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-12/0reiugdv/IMG-20250212-WA0008.jpg)
வெடி விபத்தில் காயமடைந்தவர்கள் மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி வீரலட்சுமி மற்றும் சைமன் டேனியல் ஆகியோர் நேற்று உயிரிழந்தனர். இதனால் பட்டாசு வெடி விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது.