விருதுநகர்: மூலப்பொருள் உராய்வால் பட்டாசு ஆலையில் வெடி விபத்து; பெண் தொழிலாளர் பலி.. பலர் படுகாயம்!
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இடிபாடுகளில் சிக்கி பெண் தொழிலாளர் ஒருவர் உயிரிழந்தார். இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "விருதுநகரை அடுத்த வச்சகாரப்பட்டி காவல் எல்லைக்குட்பட்ட சின்னவாடி கிராமத்தில், சதானந்தபுரத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் (வயது 55) என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை, 'சத்யபிரபு ஃபயர் ஒர்க்ஸ் பேக்டரி' எனும் பெயரில் செயல்பட்டு வருகிறது.
நாக்பூர் லைசென்ஸ் பெற்று இயங்கும் இந்த பட்டாசு ஆலையில் சுமார் 20-க்கும் மேற்பட்ட அறைகளில், 60-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்துவருகின்றனர். இன்று (06-02-2025) வழக்கம்போல, பட்டாசு ஆலையில் பேன்சி ரக பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மதிய உணவு இடைவேளைக்காக தொழிலாளர்கள் அனைவரும் தத்தமது அறைகளில் இருந்து வெளியேறி சற்று தொலைவில் உணவு அருந்தச் சென்றுள்ளனர். அப்போது, வெடி மருந்தில் ஏற்பட்ட உராய்வு காரணமாக எதிர்பாராத விதமாக பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. வெடிவிபத்தால் ஏற்பட்ட 'தீ' அங்கு கிடந்த காய்ந்த செடிகள் மற்றும் குப்பைகள் மீது படர்ந்து அடுத்தடுத்த அறைகளுக்கும் பரவியது.
இதன் காரணமாக பட்டாசு ஆலையில் அடுத்தடுத்து 10 அறைகள் வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் நான்கு அறைகள் தரைமட்டமானது. தொழிலாளர்கள் உணவு இடைவேளைக்காக வெளியேறிய சமயம் வெடிவிபத்து நிகழ்ந்ததால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டதோடு சுதாரித்துக் கொண்ட தொழிலாளர்கள் அங்கிருந்து ஓட்டம்பிடித்து ஆலைக்கு வெளியே வந்துவிட்டனர். இருப்பினும், பட்டாசு உற்பத்தி அறையில் இருந்து வெளியேற முடியாமல் இடிபாடுகளில் சிக்கி வதுவார்பட்டியை சேர்ந்த ராமலட்சுமி (வயது 50) என்பவர் உடல் கருகி பலியானார். மேலும் அதிவீரன்பட்டியை சேர்ந்த வீரலட்சுமி, வைத்தீஸ்வரி, கஸ்தூரி(31), பொம்மையாபுரத்தைச் சேர்ந்த முருகேஸ்வரி(55), ஆவூடையாபுரத்தை சேர்ந்த பெண் தொழிலாளி மாணிக்கம்(54) மற்றும் மீனம்பட்டியைச் சேர்ந்த சைமன் டேனியல் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தை அறிந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து காயம்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையில், தீயணைப்பு மீட்பு படை மற்றும் வச்சகாரப்பட்டி போலீஸூக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர், உயிரிழந்த ராமலட்சுமியின் உடலை மீட்டு, உடற்கூறாய்வுக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பட்டாசு விபத்து நடைபெற்ற இடத்தில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் (பொறுப்பு) நேரில் ஆய்வு நடத்தி விபத்து குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.
வெடிவிபத்தில் காயமடைந்த வீரலட்சுமி மற்றும் கஸ்தூரி ஆகியோர் உடன் பிறந்த அக்காள் தங்கை ஆவர். இருவருக்குமே 40 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டிருப்பதால் அவர்கள் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருக்கும் சைமன் டேனியலுக்கு உடல் தீக்காயம் 90 சதவீதத்திற்கும் மேல் இருப்பதால் அவருக்கு அதி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் பட்டாசு விபத்து குறித்து வச்சக்காரப்பட்டி போலீஸில் அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்" என்றனர்.