உத்தரப்பிரதேசத்தில் லட்டு திருவிழா: மேடை சரிந்து 6 பேர் பலி, 50 பேர் காயம்..
உத்தரப்பிரதேச மாநிலம் பாக்பத் என்ற இடத்தில் மத நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஜெயின் மதத்தினர் அங்குள்ள ஜெயின் கோயிலில் இதற்காக ஒரே இடத்தில் கூடினர். அவர்கள் ஒன்று கூடி லட்டு மஹோத்சவ் நிகழ்ச்சியை நடத்தினர். கடந்த 30 ஆண்டுகளாக இந்த லட்டு மஹோத்சவ் நிகழ்ச்சி நடந்து வருகிறது. பக்தர்கள் கோயிலுக்கு வந்து சாதுக்கள் முன்பு ஆதிநாத்திற்கு லட்டு வழங்குவது வழக்கம். இதற்காக அங்கு கம்புகள் மூலம் பிரம்மாண்ட மேடை ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது. அந்த மேடையில் ஒரே நேரத்தில் ஏராளமானோர் ஏறி நின்றதால் எடை தாங்காமல் மேடை சரிந்து விழுந்தது. இதனால் பக்தர்கள் அலறியபடி முண்டியடித்துக்கொண்டு தப்பிக்க முயன்றனர். இதில் இடிபாடுகளில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 50 பேர் காயம் அடைந்துள்ளனர்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-01-28/tkx56bry/baghpat-accident-281539439-16x90.webp)
ஆம்புலன்ஸ் வண்டிகள் வரவழைக்கப்பட்டு காயம் அடைந்தவர்கள் உடனே மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். லேசாக காயம் அடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இது குறித்து நிகழ்ச்சிக்கு வந்திருந்த ராகேஷ் ஜெயின் என்ற பக்தர் கூறுகையில், "ஒவ்வொரு ஆண்டும் லட்டு மஹோத்சவத்தின் போது மேடை அமைப்பது வழக்கம். மேடையில் பண்டிதர்கள் ஏறி நின்று லட்டு பிரசாதத்தை கொடுப்பார்கள். இந்த ஆண்டு அப்படி கொடுத்தபோது மேடை சரிந்துவிட்டது''என்றார். காயம் அடைந்தவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் கிடைக்க உதவும்படி மாவட்ட நிர்வாகத்திற்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.