Valentine's Day: நிச்சயமானவளைத் தூக்கிய காதலர், அதிர வைத்த மணநாள்... ஸ்டெல்லா மேரியின் அழியாக் காதல்
''இப்பெல்லாம் காதல் ரொம்ப மாறிடுச்சுனு சொல்றாங்க. ஒருத்தருக்கொருத்தர் மானசீகமா பிடிச்சுப் போய் காதலிக்கிறாங்கன்னா, சூழல், வாழ்க்கை முறை எல்லாமே ரெண்டாம்பட்சம்தான். அந்தக் காதல் நிச்சயம் ஜெயிக்கும். அதனால காதல் மாறிடுச்சுங்கிறதையெல்லாம் நான் ஏத்துக்க மாட்டேன். நீங்க நம்பலைன்னா, அதுக்கு நாந்தான் உதாரணம்'' என்கிறார் சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த ஸ்டெல்லா மேரி.
82 வயதாகும் ஸ்டெல்லா மேரி பிள்ளைகள் கூப்பிடு தூரத்தில், அதுவும் தங்களுடன் வந்து தங்கி விடும்படி கூப்பிட்டுக் கொண்டிருக்கும் நிலையிலும் அவர்களுடன் செல்லாமல் சிங்கிள் பெட் ரூம் வாடகை வீடு ஒன்றில் தனியாகப் பொங்கிச் சாப்பிட்டபடி வசித்து வருகிறார்.
'வயதான காலத்துல பிள்ளைகளுடன் போய் இருக்கலாமே, அவங்கதான் நல்லா கவனிச்சிக்கிடுவாங்கனும் சொல்றீங்களே, அப்புறமென்ன?' என நாம் கேட்டதும், 'இப்படி வந்து உக்காருங்க.. ' என்றபடி தன் கதையைச் சொல்லத் தொடங்கினார்..
![சத்தியசீலன்](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-13/8wan6za3/WhatsApp_Image_2025_02_13_at_8_05_25_PM__1_.jpeg)
''அந்தப் போட்டோவைப் பாருங்க காக்கி உடையில கம்பீரமா இருக்காரே, பேரு சத்தியசீலன். பேருக்கேத்த மனுஷன். என் புருஷன். கேரளாவைப் பூர்வீகமாக் கொண்டது அவர் குடும்பம். ஆனா அவர் பிறந்தப்ப சென்னை பரங்கிமலைக்கு வந்துடுச்சு. அவருடைய அப்பாவும் போலீஸ். எனக்கு திருச்சி பக்கம். சின்ன வயசுல அம்மாவை இழந்துட்டேன். அப்பா சென்னை பரங்கிமலையில இருக்கிற அத்தை வீட்டுல கொண்டு வந்து விட்டார். அங்க ஒரே பள்ளிக்கூடத்துல நான், என் அத்தை பையன், இந்த சத்தியசீலன் மூணு பேரும் படிக்கிறோம். அவங்க ரெண்டு பேரும் எனக்குக் கொஞ்சம் சீனியர்.
அவங்க ரெண்டு பேருக்குமே படிப்பு முடிஞ்சு போலீஸ் வேலைக்குத் தேர்வாகிறாங்க. அதுக்கான ட்ரெய்னிங் போகணும். அதுக்கு முந்தைய நாள் எங்கிட்ட வந்து 'எனக்காகக் கொஞ்ச நாள் காத்திருப்பியா'னு கேட்டார் சத்தியசீலன். 'நான் என்னத்துக்கு உங்களுக்காக காத்திருக்கணும்?' இப்படித்தான் கேட்டேன். ஏன்னா, அப்ப நான் பியூசி கூட முடிக்காத பருவம்.
'இல்ல, ட்ரெய்னிங் முடிச்சு வந்ததும் நாம கல்யாணம் செய்துக்கலாம்'னு சொன்னார். அவ்ளோதான், 'ஐ லவ் யூ யூ லவ் மீ?'னெல்லாம் ஏதும் கிடையாது. எனக்கு என்ன சொல்றதுனு தெரியலை. 'யாருக்கு யார்னு விதி இருக்கும், நமக்கு அப்படி எழுதியிருந்தா ஏத்துக்குவோம்'னு மட்டும் சொன்னேன். ஆறு மாச ட்ரெய்னிங்னு கிளம்பிப் போயிட்டார்.
இதுக்கிடையில் என்னுடைய அத்தை மகனுக்கு இந்த விஷயம், அதான் அவர் என்னைக் காத்திருக்கச் சொன்ன விஷயம் தெரிஞ்சுடுச்சு. என்ன சொல்லிட்டு வந்தார்னு தெரியல, பயிற்சியின் பாதியிலேயே வந்து என்னை வலுக்கட்டாயமாக் கடத்திப் போய் அவருக்கு நிச்சயம் பண்ணிட்டாங்க. அதோட மட்டுமில்லாம இடத்தை மாத்தணும்னு மீஞ்சூர் பக்கம் கூட்டிக் கொண்டு போய் வச்சிட்டாங்க.
நான் என்ன செய்யறதுனு தெரியாம இருந்தேன். ஏற்கனவே கூட வேலை பார்த்தவர்ங்கிறதால அவங்க ரெண்டு பேருக்கும் பொதுவான சிலர் மூலமா நான் இருக்கிற இடத்தைத் தெரிஞ்சு மனுஷன் கரெக்டா வந்து என்னைத் தூக்கிட்டார். பாரிமுனையில் பதிவுத் திருமணம் முடிஞ்சிடுச்சு. அவருடைய சில நண்பர்கள் சாட்சி கையெழுத்துப் போட வந்திருந்தாங்க. அன்னைக்கு மே 28ம் தேதி 1959ம் வருஷம்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-13/k5df5i5f/stella-1.jpg)
அன்னைக்கு ட்ரெய்னிங் முடிச்சு அவர் வேலையில சேர்ந்த முதல் நாளும் கூட. சர்வீஸ் ரெக்கார்டுல நாமினிங்கிற இடத்துல 'ஸ்டெல்லா'னு என் பேரைப் போட்டுட்டார்.
எத்தனை நாளுக்கு கல்யாணத்தை மறைக்க முடியும்? ரெண்டு வீட்டுக்கும் விவகாரம் தெரிஞ்சு கொந்தளிச்சுட்டாங்க. அவங்களைப் பொறுத்தவரை ஜாதி, மதம் வேறனு மட்டும்தான் பார்த்தாங்க. என் மாமனார் அவருக்கிருக்கிற செல்வாக்கை வச்சு விஷயத்தை டி.ஜி.பி. வரை கொண்டு போயிட்டார். என்னுடைய பெரியப்பா எம்.ஜி.ஆர். அண்ணன் சக்கரபாணி புள்ளைங்களுக்கு டியூஷன் வாத்தியார். அதனால அவரும் செல்வாக்கைப் பயன்படுத்தினார்.
ஆனா என் வீட்டுக்காரர் அசரலை. கூட இருந்த சில நல்ல போலீஸ் அதிகாரிங்க எங்கிட்ட வந்து, 'இந்த விஷயத்துல உங்க கருத்துதான் முக்கியம். ஸ்ட்ராங்கா நீங்க இருந்தா உங்களைப் பிரிக்க முடியாது'னு சொன்னாங்க. எங்கிட்டக் கேட்டாங்க. நான் ஒரே வார்த்தையில சொல்லிட்டேன், இவர்கூட அனுப்புனா போறேன், இல்லாட்டி செத்துப் போறேன்'னு. அவ்வளவுதான். ரெண்டு குடும்பங்களும் எங்களைத் தலைமுழுகிடுச்சு.
எனக்கு அஞ்சு பிள்ளைக பிறந்து அதுங்க வளர்ந்து ஆளாகிற வரை ரெண்டு வீட்டுலயும் எங்களைச் சேர்க்கலை. அவர் வீட்டுல என் மாமியார் இறந்த பிறகுச் சேர்த்தாங்க. எங்க வீட்டுல என்னுடைய அப்பா இறந்த பிறகுதான் சேர்த்தாங்க. ஆனா அதுக்காக வருத்தமெல்லாம் படலை. என் மேல அவ்வளவு பிரியமா இருந்தார். துறையிலயும் நேர்மையான அதிகாரினு பெயரெடுத்தார். சந்தோஷமாப் போச்சு வாழ்க்கை. பசங்களை நல்லா படிக்க வச்சு ஆளாளுக்கு நல்ல வேலையில சேர்ந்தாங்க.
பணியில இருந்து ரிட்டயர்டு ஆனார். அப்பவும் இதே வாடகை வீட்டுலதான் இருந்தோம். பிள்ளைங்கள்லயும் ஒரு ஆளுக்கு லவ் மேரேஜ் நடந்தது. ஓய்வுக் காலத்தைச் சந்தோஷமா கழிச்சிட்டிருந்தப்பதான் 2019ம் வருஷம் அதே மே மாசம் 28ம் தேதி கண்ணை மூடிட்டார். வயோதிகம்தான் வேற எந்தப் பிரச்னையுமில்ல.
கல்யாணமாகி சரியா 60 வருஷம் முடியற அன்னைக்கு, மோதிரம் மாத்தின அதே சாயங்காலப் பொழுதுல அவரை அடக்கம் பண்ணினோம்'' என்ற ஸ்டெல்லா மேரி சில நிமிட ஆசுவாசத்திற்குப் பின் தொடர்ந்தார்...
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-13/5a9ca2gi/stella.jpg)
'அவர் இறந்த பின்னாடி பசங்க எங்க கூட வந்திடுங்கம்மானு கூப்பிடத்தான் செஞ்சாங்க. எல்லாப் பிள்ளைளும் நல்லாவே என்னைக் கவனிச்சிக்கிடுவாங்கதான். ஆனா அவர் கூட கடைசி வரை வாழ்ந்த வீட்டை விட்டு வெளியேற எனக்கு மனசு கேக்கலை. இந்த வீட்டு உரிமையாளரும் அவ்வளவு தங்கமானவர். நீங்க இருக்கணும்னு நினைக்கிற வரைக்கும் இது உங்க வீடுதான்னு சொல்லிட்டார். அதனால இங்கேயே இருக்கேன். ஆண்டவர் கை, கால் சுகத்தைத் தந்திருக்கார். என்னால முடிஞ்ச சோத்தை வடிச்சுட்டு, ஒரு ரசமோ, பருப்போ வச்சு சாப்பிட்டுக்குவேன்.
உடம்புக்குக் கொஞ்சம் அசதியா இருக்கா, ஒரு தயிர் பாக்கெட் வாங்கி அன்னைக்குப் பொழுதைக் கடத்திடுவேன். ஆனா அவர் நினைப்போட சந்தோஷமாவே இருக்கேன்யா, இது போதும் எனக்கு'' என நிறைவாக முடித்தார் திருமதி. ஸ்டெல்லா மேரி சத்திய சீலன்.
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play