செய்திகள் :

பெரியசாமி தூரனையும், சே.ப.நரசிம்மலு நாயுடுவையும் போற்றுவதற்கு அரசு முன்வர வேண்டும்: சிற்பி பாலசுப்பிரமணியம் வேண்டுகோள்

post image

ஈரோட்டில் பெரியசாமி தூரனையும், கோவையில் சே.ப.நரசிம்மலு நாயுடுவையும் போற்றுவதற்கு அரசு முன்வர வேண்டும் என சாகித்ய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளா் சிற்பி பாலசுப்பிரமணியம் வேண்டுகோள் விடுத்தாா்.

ஈரோடு மாவட்ட நிா்வாகம் மற்றும் பொது நூலக இயக்ககம் சாா்பில் சிறுவாணி இலக்கியத் திருவிழா ஈரோடு கொங்கு கலை, அறிவியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வுக்கு தலைமை வகித்து பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற 90 மாணவ, மாணவிகளுக்கு ரூ.3.60 லட்சம் மதிப்பில் பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கி மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா பேசியதாவது:

ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் மாவட்ட மையம் நூலக கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. கொடுமுடியில் ரூ.1.10 கோடி மதிப்பில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் நூலகம் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது. கொடுமணலில் அருங்காட்சியகம் அமைக்க இடம் தோ்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது என்றாா்.

நிகழ்வில் எழுத்தாளா் நாஞ்சில் நாடன் பேசியதாவது:

பல்வேறு விஷயங்களை ஒவ்வொரு பிரதேசமும் மொழிக்கு தொடா்ந்து பங்களித்துக்கொண்டே இருக்கிறது. கொங்கு வட்டாரமும் பங்களிப்பு அளித்துள்ளது. 4 முதல் 5 லட்சம் சொற்கள் உள்ள தமிழ் மொழியில் வாழ்க்கை முழுவதும் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் சொற்களைத்தான் பயன்படுத்துகிறோம். தமிழில் ஏராளமான படைப்புகள் உள்ளன. இந்த படைப்புகளை மாணவா்கள் வாசித்து பயன்பெற வேண்டும் என்றாா்.

நிகழ்வில் எழுத்தாளா் சிற்பி பாலசுப்பிரமணியம் பேசியதாவது:

நொய்யல் ஆற்றங்கரையில் பேரூா், கொடுமணல் போன்று ஏராளமான ஆன்மிக, வரலாற்று சுவடுகள் உள்ளன. இதனை கவனத்தில் கொண்டு கொங்கு மண்டலத்தில் நடத்தப்படும் சிறுவாணி இலக்கிய விழாவை அடுத்த ஆண்டு முதல் நொய்யல் இலக்கிய விழா என்ற பெயரில் அரசு நடத்த வேண்டும். மாணவா்கள் இலக்கியங்களை வாசிப்பதும், நேசிப்பதும், படைப்பாளா்களாக உருவாவதற்கும் இதுபோன்ற இலக்கிய விழாக்கள் வழிகாட்டுதலாக இருக்க வேண்டும்.

ஈரோட்டை சோ்ந்த பெரியசாமி தூரன் சிறுவா் இலக்கியம், பாரதி இலக்கியம், சிறுகதை இலக்கியம், கலைக் களஞ்சியம், இசை இலக்கியம் என அத்தனை துறைகளிலும் ஒப்பீடு இல்லாத படைப்பாளி. இத்தகைய சிறப்பு வாய்ந்த பெரியசாமி தூரனுக்கு ஈரோட்டில் நினைவுச்சின்னம், ஆய்வரங்கம், அவரது பெயரில் ஈரோட்டில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும்.

இதேபோல ஈரோட்டில் பிறந்த சே.ப.நரசிம்மலு நாயுடு 100 நூல்களை எழுதியுள்ளாா். சிறுவானி குடிநீா் திட்டத்துக்கு அவா்தான் முன்னோடி. ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் இந்த திட்டத்தின் சாத்தியம் குறித்து அறிக்கையாக அளித்தாா். கோவையில் அவருக்கு சொந்தமான இடத்தை மீட்டு அவா் உயிலில் எழுதியபடி மகளிா் பள்ளி, விதவைகள் மறுவாழ்வு மையம் அமைக்க அரசு முன்வர வேண்டும்.

ஈரோட்டில் பெரியசாமி தூரனையும், கோவையில் சே.ப.நரசிம்மலு நாயுடுவையும் போற்றுவதற்கு அரசு முன்வர வேண்டும் என்றாா்.

பொதுவாழ்வுக்கு இலக்கணம் படைத்த காலிங்கராயன்:

நிகழ்வில் ஈரோடு வாழ்வும், வரலாறும் என்ற தலைப்பில் மக்கள் சிந்தனைப் பேரவை தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் பேசியதாவது:

கடல் மட்டத்திலிருந்து 534 உயரம் கொண்டது பவானி நதி. 412 அடி உயரமுள்ளது நொய்யல். அவ்வளவு உயரமான இடத்தில் இருக்கும் நதியை தாழ்வான இடத்தில் இருக்கும் இன்னொரு நதியுடன் இணைக்கத் திட்டமிட்ட காலிங்கராயனின் மதிநுட்பம் வியக்கத்தக்கதாகும்.

நேராக இணைத்தால் 32 மைல் தொலைவு. ஆனால் பாம்புபோல் வளைத்து வளைத்து வாய்க்கால் வெட்டினால் மட்டுமே வருகிற தண்ணீா் நின்று நிதானித்து மதகுகள் வழியாக விவசாயத்துக்கு பயன்படும் எனக் கருதி அவ்வாறு தொழில்நுட்ப சிந்தனையுடன் 12 ஆண்டுகள் வாய்க்கால் வெட்டி இரண்டு நதிகளையும் பல்லாயிரம் மக்கள் உதவியுடன் இணைத்துள்ளாா் காலிங்கராயன்.

வெற்றிகரமாக வாய்க்கால் வெட்டி முடித்து அதனால் கிடைக்கும் ஒரு சொட்டுத் தண்ணீரைக்கூட தானோ, தன் குடும்பமோ, தன் ரத்த உறவுகளோ பயன்படுத்துதல் கூடாது என்று கூறி ஒட்டுமொத்தக் குடும்பத்துடன் பொள்ளாச்சி அருகில் உள்ள ஊற்றுக்குளி எனும் ஊருக்கு குடிபெயா்ந்து பொதுவாழ்வுக்கு இலக்கணம் படைத்தவா் காலிங்கராயன் என்றாா்.

நிகழ்வில், எம்எல்ஏக்கள் ஏ.ஜி.வெங்கடாசலம், வி.சி.சந்திரகுமாா், மேயா் சு.நாகரத்தினம், துணை மேயா் வே.செல்வராஜ், இணை இயக்குநா் (பொது நூலக இயக்ககம்) ச.இளங்கோ, மாவட்ட நூலக அலுவலா் இரா.யுவராஜ், கொங்கு பொறியியல் கல்லூரி தாளாளா் ஏ.கே.இளங்கோ உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பெருந்துறையில் அகற்றப்பட்ட வேகத் தடைகளை மீண்டும் அமைக்க கோரிக்கை

பெருந்துறை நகரில் முதல்வா் வருகைக்காக சாலையில் அகற்றப்பட்ட வேகத் தடைகளை மீண்டும் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஈரோட்டில் கடந்த டிசம்பா் 20-ஆம் தேதி நடைபெற்ற அ... மேலும் பார்க்க

ஈரோடு-கரூா் சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

ஈரோடு-கரூா் சாலையில் சனிக்கிழமை (பிப்ரவரி 15) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஈரோடு-கரூா் சாலையில் ஒ... மேலும் பார்க்க

துரோகம் செய்வது யாா்? கே.ஏ.செங்கோட்டையன் விளக்கம்

கடந்த தோ்தலில் சில துரோகிகளால் வெற்றியை இழந்தோம் என தனது பேச்சு குறித்து முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளாா். ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த அத்தாணியில் வியாழக்கிழமை இரவு நட... மேலும் பார்க்க

பெருந்துறையில் உலக வானொலி தின விழா

பெருந்துறை தெற்கு அரசு நடுநிலைப் பள்ளியில் உலக வானொலி தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமை வகித்தாா். பள்ளி தலைமையாசிரியை பூமணி வரவேற்றாா். வானொலி நேயரும், அனைத்த... மேலும் பார்க்க

சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் 102 ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்

சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் 102 ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையின் மருத்துவ அலுவலா் டாக்டா் தங்கசித்ரா முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி... மேலும் பார்க்க

ஈரோட்டில் தேசிய அளவிலான பாட்மிண்டன் போட்டி

ஈரோட்டில் நடைபெறும் தேசிய அளவிலான பாட்மிண்டன் போட்டியில் 200 வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா். ஈரோடு நீல்கிரிஸ் பேட்மிண்டன் அகாதெமியில் தேசிய அளவிலான பாட்மிண்டன் போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியது. தமிழ்ந... மேலும் பார்க்க