Allahbadia: போன் ஸ்விட்ச் ஆப், வீட்டிற்குப் பூட்டு, தேடும் போலீஸ்.. யூடியூப்பர் அல்லாபாடியா தலைமறைவு
யூடியூப்பர் அல்லாபாடியா மற்றும் அபூர்வா மகிஜா ஆகியோர் நடத்திய 'India's Got Latent' என்ற ரியாலிட்டி ஷோவில் அல்லாபாடியா பேசியது சர்ச்சையைக் கிளப்பியது.
மும்பை மற்றும் அஸ்ஸாம் போலீஸார் இது தொடர்பாக அல்லாபாடியா, அபூர்வா மகிஜா, சமய் ரைனா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஷோவில், "உங்களது பெற்றோர் உறவு வைத்துக்கொள்வதைப் பார்ப்பீர்களா?" என்று நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களிடம் அல்லாபாடியா கேட்டார். இது சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து அதற்காக அல்லாபாடியா மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனாலும், பிரச்னை இன்னும் முடிவுக்கு வரவில்லை.
மும்பை போலீஸார் அல்லாபாடியாவிற்கு நேரில் ஆஜராகக் கூறி இரண்டு முறை சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் ஆஜராகவில்லை. மும்பை வர்சோவாவில் உள்ள தனது வீட்டில் வந்து வாக்குமூலம் வாங்கும்படி அல்லாபாடியா கேட்டுக்கொண்டார். ஆனால் அதனை போலீஸார் ஏற்றுக்கொள்ளவில்லை.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-15/0xk7e8y6/rebelkidapoorvamukhija17395594187861739559446364.avif)
அஸ்ஸாம் போலீஸாரும் அல்லாபாடியாவைத் தேடி மும்பை வந்துள்ளனர். மும்பை கார்ரோடு போலீஸாரும், அஸ்ஸாம் போலீஸாரும் சேர்ந்து அல்லாபாடியா வீட்டிற்குச் சென்றனர். ஆனால் அவரது வீடு பூட்டப்பட்டு இருந்தது. அவர் எங்குச் சென்றார் என்று தெரியவில்லை. அவரது மொபைல் போனும் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. நாட்டின் பல இடங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதால் அனைத்து வழக்குகளையும் ஒரே இடத்திற்கு மாற்ற உத்தரவிடவேண்டும் என்று கோரி அல்லாபாடியா சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இம்மனுவை சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் மகன் அபினவ் சந்திரசூட் மூலம் தாக்கல் செய்துள்ளார். அதில் அல்லாபாடியா தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கேட்டு இருந்தார்.
இம்மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால் அதனைத் தலைமை நீதிபதி சஞ்ஜீவ் கண்ணா ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். அதோடு விசாரணைக்கான தேதி ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் உட்பட இதோடு தொடர்புடைய 7 பேரிடம் மும்பை போலீஸார் வாக்குமூலம் வாங்கி இருக்கின்றனர். மும்பை சைபர் பிரிவு போலீஸார் மொத்தம் 50 பேருக்குச் சம்மன் அனுப்பி இருக்கின்றனர்.
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play