இத்தாலிக்குத் தத்து போனவர் 38 ஆண்டுகளுக்குப் பிறகு ஊர் திரும்பிய கதை... தேனியில் நெகிழ்ச்சி சம்பவம்!
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே மார்க்கையன் கோட்டையைச் சேர்ந்தவர் உத்தாண்டபிள்ளை. திருமணம் முடிந்த சில வருடங்களிலேயே இவருடைய மனைவி உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்துவிட்டார். இவருக்குப் பாலமுருகன் என்ற மகனும், சித்ரா என்ற மகளும் உள்ளனர். குழந்தைகளை வளர்க்கப் பெரிதும் சிரமப்பட்டுள்ளார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-15/emv2f1wv/IMG-20250215-WA0009.jpg)
இதனால் உறவினர் ராஜூ என்பவர் மூலம் பாலமுருகனும், சித்ராவும் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு வந்த இத்தாலி நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டியானா-லூசானா தம்பதி பாலமுருகனையும், சித்ராவையும் தத்தெடுக்க விரும்பியுள்ளனர். முறைப்படி இருவரையும் இத்தாலி நாட்டிற்கு அழைத்துச் சென்று படிக்க வைத்து நன்றாக வளர்த்துள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கிறிஸ்டியானா-லூசானா தம்பதி வயது மூப்பால் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். இதையடுத்து இத்தாலி நாட்டில் அவர்கள் செய்து வந்த தொழிலையும், ஆடிட்டர் வேலையும் பாலமுருகன் செய்துவந்துள்ளார். தங்கை சித்ரா மருத்துவர் ஒருவரைத் திருமணம் செய்து 2 குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-15/ijnbdppp/IMG-20250215-WA0007.jpg)
பாலமுருகனுக்கு தற்போது 44 வயது ஆன நிலையில், தமிழகத்தில் உள்ள தனது உறவினர்களைப் பார்க்க வேண்டும் எனத் தோன்றியிருக்கிறது. இதையடுத்து குடும்பம், உறவினர்கள் குறித்து விசாரித்திருக்கிறார். மேலும் சிறுவயதில் தாய்மாமா ராஜு எழுதிய கடிதம் கிடைத்துள்ளது.
சிறுவயதிலேயே இத்தாலி சென்றுவிட்டதால் பாலமுருகனுக்கு அந்தக் கடிதத்தைப் படிக்கத் தெரியவில்லை. இதனால் இத்தாலியில் வசித்துவரும் சிவகங்கை காளையார்கோயிலைச் சேர்ந்த ஜோசப் என்பர், பாலமுருகனுக்குக் கடிதத்தைப் படித்துக் காட்டியிருக்கிறார். அப்போது தேனி மார்க்கையன் கோட்டையில் உறவினர்கள் இருப்பதை அறிந்துள்ளார். பிறகு ஜோசப் உதவியுடன் 6 வயதில் ஊரைவிட்டுப் பிரிந்தவர் 38 ஆண்டுகளுக்குப் பிறகு தேனி வந்துள்ளார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-15/7rnprx1d/IMG-20250215-WA0010.jpg)
தாய்மாமா உள்ளிட்ட அவரின் உறவினர்கள் சந்திக்க, ஆச்சரியமடைந்த உறவினர்கள் கண்ணீர் ததும்ப அவர்களை வரவேற்றனர். குடும்பத்தினருடன் ஊரைச் சுற்றிப் பார்த்து தன்னுடைய சிறுவயது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். தத்தெடுக்கப்பட்டு இத்தாலி சென்றவர் 38 ஆண்டுகளுக்குப் பிறகு ஊர் திரும்பியது மார்க்கையன் கோட்டை மக்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play