பிரதமரின் ஊரக குடியிருப்புத் திட்ட நிதியை அதிகரிக்க வேண்டும்: எம்.பி.க்கள் கோரிக...
இரட்டைப் படுகொலை: `விசாரணைக்கு முன்பே தீர்ப்பெழுதுவதுதான் ஸ்டாலின் மாடலா?'- சாடும் எதிர்க்கட்சிகள்
மயிலாடுதுறை அருகே முட்டம் கிராமத்தில் இளைஞர்கள் இரண்டு பேர் நேற்றிரவு அதே பகுதியைச் சேர்ந்த மூவரால் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவத்தைப் பொறுத்தவரையில் முதலில், சாராய விற்பனையை தட்டி கேட்டதால் தான் இந்த படுகொலை நிகழ்த்தப்பட்டதாக அப்பகுதியினர் புகார் கூறினர். பின்னர், போலீஸ் இந்த விவகாரத்தில், ``மது விற்பனை தொடர்பாக கொலை நடந்ததாக தவறான தகவல் பரப்பப்படுகிறது. ஒரே தெருவில் வசிக்கும் இளைஞர்களுக்குள் ஏற்பட்ட வாய் தகராறுதான் கொலைக்குக் காரணம்." என்று கூறியது. போலீஸாரின் இத்தகைய உடனடி விளக்கத்தால், விசாரிக்காமல் இப்படி அவசரகதியில் கூறுவதா என ஆளும் திமுக அரசை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-01-09/zusg4zub/WhatsApp_Image_2023_09_21_at_13_25_19__1_.jpeg)
அதில், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ``மயிலாடுதுறை அருகே சாராய விற்பனையைத் தட்டிக் கேட்ட இரண்டு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக வந்துள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்றன. எந்த தவறு குறித்து புகார் அளித்தாலும், புகார் அளிப்பவர்கள் மிரட்டப்படுவதும் , கொல்லப்படுவதும் என, மக்களுக்கு முற்றிலும் Unsafe Model அரசை நடத்தும் திமுக முதல்வர் ஸ்டாலின், தனது ஆட்சியில் எந்த தவறுமே நடக்காதது போல், போட்டோஷூட், வீடியோஷூட் என வலம் வருவது தமிழ்நாட்டு அரசியலில் புதிய விந்தை. ஸ்டாலினுக்கு போட்டோஷூட்டிற்கு அரிதாரம் பூசிக்கொள்வதில் இருக்கும் கவனம், தனக்குதானே புகழ்ந்து கொள்ளும் இருக்கும் ஆர்வம், என்றைக்காவது ஆட்சி நடத்துவதில் இருந்தது உண்டா?
இதில், இவரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை, இந்த கொலை வாய்த் தகராறு, முன்விரோதம் காரணமாக நடந்தது என பத்திரிகை செய்தி வெளியிடுகிறது. வழக்கை விசாரிப்பதற்கு முன்னமே காவல்துறையே தீர்ப்பை எழுதுவது தான் ஸ்டாலின் மாடலா? இளைஞர்கள் கொலையின் காரணத்தை தீர விசாரிப்பதுடன், தொடர்புள்ளோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன். விளம்பரங்களில் மட்டும் இருக்கும் கவனத்தை , மக்கள் பணியில் சிறிதாவது செலுத்துமாறு ஸ்டாலினைக் கேட்டுக்கொள்கிறேன்." என்று எக்ஸ் தளத்தில் வலியுறுத்தியிருக்கிறார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2024-08-27/trtlxfvb/66ce0cb9d6ce0.jpg)
அதேபோல், எக்ஸ் தளத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ``தமிழகம் முழுவதுமே கள்ளச்சாராயம் ஆறாக ஓடிக் கொண்டிருக்கிறது. இது அந்தந்த பகுதி காவல்துறைக்குத் தெரியாமலா இருக்கும்? இன்று சாராய வியாபாரிகளால் இரண்டு இளைஞர்கள் உயிர் போயிருக்கிறதே. உங்களுக்கெல்லாம் மனசாட்சி என்று ஒன்று இருக்கிறதா? துருப்பிடித்த இரும்புக்கையை வைத்துக் கொண்டு, தன்னைத்தானே புகழ்ந்து தினமும் ஷூட்டிங் நடத்திக் கொண்டிருக்க, முதலமைச்சர் ஸ்டாலினுக்குக் கூச்சமில்லையா?
சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற முடியவில்லை என்றால், தமிழ் சினிமாவில் முழு நேர துணை நடிகராகச் செல்ல வேண்டியதுதானே? தமிழ்த் திரையுலகம் உங்கள் கைகளில்தானே இருக்கிறது. தமிழகம் தற்போது, 2006 - 2011 திமுகவின் இருண்ட ஆட்சிக் காலத்தை விட, மிக மோசமான நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது. உங்கள் கையாலாகாத்தனத்தால், அமைதியான பொதுமக்களை, மிக மிக மோசமான எதிர்விளைவுகளுக்குத் தூண்டிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் உணர வேண்டும்." என்று விமர்சித்திருக்கிறார்.
மேலும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ``சாராய விற்பனை குறித்துப் பல முறை புகாரளித்தும் கடுமையான நடவடிக்கை எடுக்கத்தவறிய காவல்துறையின் அலட்சியப்போக்கே தற்போது இரண்டு இளைஞர்களின் இன்னுயிர் பறிபோக முதன்மைக் காரணமாகும். தமிழ்நாட்டில் பெருகி ஓடும் கள்ளச்சாராய விற்பனையைத் தடுத்து நிறுத்தாத, திமுக அரசின் மெத்தனப்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது. தமிழ்நாட்டில் ஆட்சியாளர்கள் இழைக்கும் அநீதிக்கு எதிராகவும், நாளும் நிகழ்ந்தேறும் சமூக அவலங்களுக்கு எதிராகவும் கேள்வி எழுப்பும் சமூக ஆர்வலர்கள் படுகொலை செய்யப்படுவது தொடர்கதையாகிவிட்டது. ஹரிஷ் மற்றும் ஹரிசக்தி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டதற்கு முன்விரோதம்தான் காரணம் என்ற தமிழ்நாடு காவல்துறையின் விளக்கம் வியப்பளிக்கிறது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-15/0wxrw7gz/66c84598b4a2d.jpg)
முன்விரோதம் ஏற்படக் காரணம் சாராய விற்பனைதானே? அரசிற்கு அவப்பெயர் ஏற்படாமல் தடுக்க வேண்டுமென்று காவல்துறை நினைத்தால் குற்றத்தைத் தடுக்க முனைய வேண்டுமே தவிர, குற்றம் நடைபெற்றதற்கான காரணத்தை மறைக்க முயலக் கூடாது. ஆகவே, திமுக ஆட்சியில் கட்டுக்கடங்காத கள்ளச்சாராய விற்பனையைத் தடுத்து நிறுத்த காவல்துறையைத் தன்னுடைய நேரடிக்கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் அவர்கள் இனியாவது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். திமுக அரசின் நிர்வாகச் சீர்கேட்டால் படுகொலை செய்யப்பட்டுள்ள ஹரிஷ் மற்றும் ஹரிசக்தி ஆகியோரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், 50 இலட்ச ரூபாய் துயர் துடைப்பு நிதியும் வழங்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்." என்று வலியுறுத்தியிருக்கிறார்.
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play