'அதிமுக ஒன்றிணைந்தால்தான் தேர்தலில் வெல்ல முடியும்' - ஓபிஎஸ்
'கள்ளச்சாராய வியாபாரத்தை மூடி மறைக்கும் காவல்துறையே...' - கடுமையாக சாடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்!
மயிலாடுதுறையில் கள்ளச்சாராய வியாபாரிகளை தட்டிக்கேட்ட விவகாரத்தில் ஹரிஸ் மற்றும் ஹரிசக்தி ஆகிய இருவர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில், 'கள்ளச்சாராயத்தை ஒழிக்க காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.' என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் குற்றம்சாட்டியிருக்கிறார்.

இது தொடர்பாக பெ.சண்முகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், 'மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை அருகே பெரம்பூர் காவல் சரகத்திற்குட்பட்ட முட்டம் கிராமத்தில் கள்ளச்சாராய விற்பனை செய்த வியாபாரிகளை தட்டிக் கேட்ட இரண்டு கல்லூரி மாணவர்கள் ஹரிஷ் மற்றும் ஹரிசக்தி ஆகியோரை கள்ளச்சாராய வியாபாரிகள் கூர்மையான ஆயுதங்களால் வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. சமூகவிரோத சக்திகளின் இந்த இரட்டை படுகொலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
முட்டம் கிராமத்தில் வடக்குதெரு பகுதியில் ராஜ்குமார், தங்கதுரை, மூவேந்தன் ஆகியோர் தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் பெரம்பூர் காவல்நிலையம் மற்றும் மயிலாடுதுறை மதுவிலக்கு பிரிவிற்கு 8க்கும் மேற்பட்ட புகார்கள் அளித்துள்ளனர். ஆனால், பெரம்பூர் காவல்நிலைய ஆய்வாளர் கள்ளச்சாராய வியாபாரிகளிடம் கையூட்டு பெற்றுக் கொண்டு புகார் கொடுக்கும் மக்களை மிரட்டுவது, வழக்குப் போடுவது என கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமின்றி புகார் அளிப்பவர்கள் குறித்த விபரங்களை சாராய வியாபாரிகளிடமும் தகவல் கூறி வந்துள்ளார். சாராய வியாபாரிகளும் புகார் கொடுத்தவர்களை தாக்குவது, கொலைமிரட்டல் விடுவது என வாடிக்கையாக இருந்துள்ளது.
கடந்த ஆண்டு கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து ஏராளமானோர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த பின்னணியில் கள்ளச்சாராயத்தை ஒழிப்பதற்கு காவல்துறையினர் உரிய முறையில் கடும் நடவடிக்கைகள் மேற்கொண்டிருந்தால் தற்போது மயிலாடுதுறையில் கள்ளச்சாராய வியபாரிகளால் இந்த இரட்டை படுகொலை சம்பவம் நடந்திருக்காது என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது.
மேலும் இந்த படுகொலை சம்பவம் முன்விரோதமே காரணம் என மாவட்ட காவல்துறையினர் சார்பில் அளித்துள்ள விளக்கம் இப்பகுதியில் நடக்கும் கள்ளச்சாராய வியாபரத்தை மூடி மறைக்கவும், இதற்கு சட்டவிரோதமாக உடந்தையாக இருந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் மதுவிலக்கு துறை அதிகாரிகளை பாதுகாக்க கூடிய செயலாகும்.
எனவே, இந்த படுகொலையில் ஈடுபட்ட கள்ளச்சாராய வியாபாரிகள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், பொதுமக்கள் சார்பில் 8க்கும் மேற்பட்ட புகார்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு உடந்தையாக இருந்த பெரம்பூர் காவல்நிலைய ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர், மதுவிலக்கு பிரிவினர் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமெனவும், படுகொலை செய்யப்பட்ட இளைஞர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு தலா ரூ. 25 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கிட வேண்டுமெனவும், தமிழகத்தில் கள்ளச்சாராய விற்பனையை முற்றிலுமாக ஒழிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.' எனக் கூறியிருக்கிறார்.