"தமிழ்நாடு இன்னொரு மொழிப்போரைச் சந்திக்கவும் தயங்காது..." - உதயநிதி எச்சரிக்கை!
மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், 'தமிழ்நாடு அரசு புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுக்கிறது.மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி தருவோம்' என்று பேசியது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
மத்திய அரசின் இந்த இந்தித் திணிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழ்நாட்டில் பெரும் எதிர்ப்பு அலை கிளம்பியிருக்கிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் மும்மொழிக் கொள்கைக்கு எதிராகத் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில் இன்று மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு, யுஜிசி புதிய விதி, புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் சென்னையில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் (பிப் 18) நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க சார்பில் அமைச்சர் துரைமுருகன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சிபிஐ முத்தரசன், சிபிஎம் பெ.சண்முகம், விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், காதர் மொய்தீன், ஜவாஹிருல்லா, வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் பேசியிருக்கும் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், "மத்திய அரசின் அடக்குமுறைக்கு பயப்பட மாட்டோம். மிரட்டலுக்கு அடிபணிவோம் என்று கருதினால் கனவிலும் அது நடக்காது. அரசியல் எங்களுக்கு 2வது மொழி, இன உணர்வு தான் முதன்மையானது. இஸ்ரோ தலைவர்களாக, விஞ்ஞானிகளாக தமிழ் வழியில் படித்தவர்களே உள்ளனர். இந்தியை ஏற்றுக்கொண்ட பல மாநிலங்கள் தங்களுடைய தாய்மொழியை இழந்து நிற்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ராஜஸ்தானி, போஜ்பூரி போன்ற மொழிகள் எல்லாம் கிட்டத்தட்ட அழிந்துவிட்டது.
இதற்குக் காரணம், அங்கு இந்தி நுழைந்தது தான். அந்த மாநில மக்கள் இந்தியை படிக்கிறார்கள், ஆங்கிலமும் படிக்கிறார்கள். ஆனால், அவர்களுடைய தாய்மொழியை மூன்றாவது மொழியாக படித்துக் கொண்டிருக்கிறார்கள். நாமும் இந்தி மொழியை ஏற்றுவிட்டால், நமது தாய்மொழியான தமிழ் மொழியை இழந்துவிடுவோம். இதைவிட, ஒரு துரோகத்தை யாராலும் செய்ய முடியாது. நம்முடைய தமிழ்நாடு அரசு, என்றைக்கும் மும்மொழிக் கொள்கையை ஏற்காது. ஆகவே, எங்கள் மீது இந்தியைத் திணிக்காதீர்கள்.

தமிழ்நாட்டுக்கு நியாயமாக கொடுக்க வேண்டியதை கொடுங்கள் என்று நாங்கள் கேட்கிறோம். நீங்கள் கொடுப்பதை விட்டுவிட்டு இப்படியே மிரட்டிக் கொண்டிருந்தீர்கள் என்றால், தமிழர்கள் எங்களுக்கு எப்படி எடுக்க வேண்டும் என்பது தெரியும். அந்த நிலைமைக்கு எங்களை தள்ளிவிடாதீர்கள். இதை நான் எச்சரிக்கையாக கூறிக்கொள்கிறேன். நாங்கள், இந்திய சட்டத்தை மதிக்கிறோம், ஜனநாயகத்தை மதிக்கிறோம். அதனால் தான் நாங்கள் ஜனநாயக வழியில் குரல் கொடுக்கிறோம். நம்முடைய குரல், ஒன்றிய பாசிச பா.ஜ.க அரசின் காதுகளை நோக்கி விழ வேண்டும்.
நம்முடைய உரிமைகளுக்கு அவர்கள் மதிப்பளிக்க வேண்டும். இல்லையென்றால், தமிழ்நாடு இன்னொரு மொழிப் போரைச் சந்திக்கவும் தயங்காது. நாம் எதிர்கொண்ட பிரச்னை, திமுக அரசினுடைய பிரச்னை கிடையாது. ஒவ்வொரு தமிழ்நாட்டு மாணவர்களுடைய பிரச்னை இது.

ஆகவே, இந்த ஆர்ப்பாட்டம் நம்முடைய பிள்ளைகளுக்கான ஆர்ப்பாட்டம். நம்முடைய உரிமைக்கான ஆர்ப்பாட்டம். இந்த விவகாரத்தில் அரசியல் செய்வதையும் அவதூறு செய்வதையும் தயவுசெய்து விட்டுவிட்டு அ.தி.மு.கவும் எங்களோடு குரல் கொடுத்து வீதிக்கு வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். கட்சிக் கொள்கைக்கு அப்பாற்பட்டு ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஓரணியில் இணைந்து நாம் மும்மொழிக் கொள்கையை எதிர்க்க வேண்டும்" என்றார்.