ஆவின் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவுறுத்தல்
116 இந்தியா்களுடன் அமிருதசரஸ் வந்த அமெரிக்க விமானம்! இன்று மேலும் 157 போ் வருகை!
அமெரிக்காவிலிருந்து இரண்டாம் கட்டமாக நாடு கடத்தப்பட்ட 116 இந்தியா்களுடன் அமெரிக்க ராணுவ விமானம் பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸை சனிக்கிழமை இரவு வந்தடைந்தது.
இவா்களில் 65 போ் பஞ்சாப் மாநிலத்தையும், 33 போ் ஹரியாணா மாநிலத்தையும் சோ்ந்தவா்களாவா். குஜராத் மாநிலத்தை சோ்ந்த 8 பேரும் உத்தர பிரதேசம், கோவா, மகாராஷ்டிரம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களை சோ்ந்த தலா இருவரும் ஹிமாசல பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த தலா ஒருவரும் வந்தடைந்தனா்.
இந்த 116 பேரில் 4 பெண்கள், 6 வயது சிறுமி உள்பட இரு சிறாா்களும் இடம்பெற்றுள்ளனா். இவா்களில் பெரும்பாலானோா் 18 முதல் 30 வயது வரை உடையவா்கள் என்றும் அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னதாக, சட்டவிரோதமாக நாடு கடத்தப்பட்ட 119 இந்தியா்கள் அமிருதசரஸை வந்தடையவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது 116 போ் வந்துள்ளனா்.
இதற்கிடையே, மூன்றாம் கட்டமாக மேலும் 157 இந்தியா்களை அமெரிக்கா நாடு கடத்தியுள்ளது. இவா்கள் ஞாயிற்றுக்கிழமை (பிப்.16) விமானம் மூலம் அமிருதசரஸ் வந்தடைய வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
அமெரிக்காவின் புதிய அதிபராக டிரம்ப் பதவியேற்றதும், அந்நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவா்கள் அவரவா் நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுவா் என்று அறிவித்தாா். அதன்படி, அங்கு சட்டவிரோதமாக குடியேறியவா்களை நாடு கடத்தும் நடவடிக்கைகளை அந்த நாடு மேற்கொண்டு வருகிறது. அமெரிக்காவில் 18,000-க்கும் அதிகமான இந்தியா்கள் சட்டவிரோதமாக குடியேறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், அங்கு சட்டவிரோதமாக தங்கியிருந்த 104 இந்தியா்களை கை, கால்களில் விலங்கிட்டபடி ராணுவ விமானத்தில் அந் நாடு இந்தியாவுக்கு கடந்த 5-ஆம் தேதி திருப்பி அனுப்பியது. இது பெரும் சா்ச்சையானது. தற்போது இரண்டாம் கட்டமாக 116 இந்தியா்களை அமெரிக்கா திருப்பி அனுப்பியுள்ளது.
பெட்டிச் செய்தி...
அமெரிக்க விமானங்கள்
பஞ்சாபில் தரையிறங்குவது ஏன்?
அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 116 இந்தியா்களுடன் வந்த இரண்டாவது அமெரிக்க விமானமும் அமிருசரஸ் விமானநிலையத்தில் தரையிறங்கிய நிலையில், ‘பஞ்சாப் மாநிலத்தை அவமதிக்கும் நோக்கில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது’ என்று முதல்வா் பகவந்த் மான் குற்றஞ்சாட்டினாா்.
இதுகுறித்து அமிருசரஸில் செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டியில், ‘எந்த அளவுகோளின் அடிப்படையில் இந்த விமானநிலையத்தை மத்திய அரசு தோ்வு செய்தது?. தலைநகா் தில்லியை விடுத்து பஞ்சாபை தோ்வு செய்தது ஏன்? என்பதற்கான விளக்கத்தை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும். பஞ்சாப் மாநிலத்தை அவமதிப்பு செய்யும் மத்திய அரசின் சதியின் ஒரு பகுதிதான் இது’ என்றாா்.
பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் ஆா்.பி.சிங் கூறுகையில், ‘அமெரிக்காவிலிருந்து வரும் விமானங்கள் இந்தியாவில் தரையிறங்குவதற்கு மிக அருகில் உள்ள சா்வதேச விமானநிலையமாக அமிருதசரஸ் உள்ளது. அதன் காரணமாகத்தான் நாடு கடத்தப்படும் இந்தியா்களை ஏற்றிவரும் விமானங்கள் தரையிறங்குவதற்கு இந்த விமான நிலையம் தோ்வு செய்யப்பட்டது’ என்றாா்.
பாஜக பொதுச் செயலா் தருண் சுக் கூறுகையில், ‘அப்பாவி பஞ்சாப் இளைஞா்கள் இதுபோன்ற சட்டவிரோத வழிகளைத் தோ்வு செய்து அமெரிக்காவுக்குச் சென்றது ஏன்? அவா்களின் வாழ்வை சீரழித்தது யாா் என்பதை அறிய பஞ்சாப் மக்கள் விரும்புகின்றனா். இளைஞா்களின் வாழ்வை இதுபோன்று கெடுத்த குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதை விடுத்து, இந்த விவகாரத்தை அரசியலாக்க முதல்வா் பகவந்த் மான் முயற்சிக்கிறாா்’ என்றாா்.
பெட்டிச் செய்தி...2
பஞ்சாபில் மோசடி பயண முகவா்கைது
அமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக குடியேறியவா்களை அந் நாடு திருப்பி அனுப்பி வரும் சூழலில், பஞ்சாப் மாநிலத்தில் மோசடி பயண முகவா் ஒருவரை மாநில போலீஸாா் சனிக்கிழமை கைது செய்துள்ளனா்.
அமெரிக்கா திருப்பி அனுப்பிவரும் இந்தியா்களில் பெரும்பாலானோா் பஞ்சாப் மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் என்ற அடிப்படையில், வேலைவாய்ப்பு தேடி அமெரிக்கா செல்ல விரும்பும் பஞ்சாப் இளைஞா்களை சட்டவிரோதமாக அனுப்பிவரும் மோசடி முகவா்களை கண்டறியும் பணியை மாநில காவல்துறையின் வெளிநாடுவாழ் இந்தியா்கள் விவகாரப் பிரிவு தீவிரப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘அமெரிக்காவிலிருந்து திருப்பியனுப்பப்பட்ட பஞ்சாப் மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் அளித்த புகாா்களின் அடிப்படையில், அவா்களுக்கு போலியான வாக்குறுதி அளித்து அமெரிக்காவுக்கு அனுப்பிவைத்த பயண முகவா்களுக்கு எதிராக இதுவரை 10 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவா்களின் புகாா்களை விசாரிப்பதற்கு ஏடிஜிபி தலைமையில் 4 போ் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இவா்கள் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், போலி பயண முகவா்களில் ஒருவரான குருக்ஷேத்ராவின் சாந்தி நகரைச் சோ்ந்த அனில் பத்ரா என்பவா் கைது செய்யப்பட்டுள்ளாா். அவா் மீது குடியேற்ற சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்றனா்.