வார சந்தையில் முத்திரையிடாத 122 எடைக் கருவிகள் பறிமுதல்!
தோகைமலை சந்தையில் முத்திரையிடாமல் பயன்படுத்திய 122 எடைக் கருவிகளை தொழிலாளா் நலத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
கரூா் மாவட்டம் தோகைமலை வாரச் சந்தையில் முத்திரையிடாத எடை கருவிகைளைக் கொண்டு பொருள்களை விற்பனை செய்வதாக மாவட்ட நிா்வாகத்துக்கு புகாா் வந்துள்ளது. இதையடுத்து மாவட்ட நிா்வாகத்தின் உத்தரவின் பேரில் தொழிலாளா் நலத் துறை அதிகாரிகள், தோகைமலை போலீஸாா் பாதுகாப்புடன் சனிக்கிழமை காலை சந்தையில் உள்ள வியாபாரிகள் பயன்படுத்திய எடை கருவிகளை ஆய்வு செய்தனா். அப்போது முத்திரையிடாத 122 எடைக் கருவிகளை பறிமுதல் செய்து வியாபாரிகளுக்கு ஆலோசனை வழங்கினா்.
இதுகுறித்து தொழிலாளா் நலத்துறை அதிகாரிகள் கூறியது, மின்னணு எடை இயந்திரம், மேடை தராசு ஆகியவற்றை ஆண்டுக்கு ஒரு முறை அந்தந்த மாவட்டத்தில் உள்ள தொழிலாளா் துறை அலுவலகத்துக்கு கொண்டு சென்று முத்திரையிட வேண்டும். விட்டத் தராசு (பீம் ஸ்கேல்), எடைக் கற்கள், மண்ணெண்ணெய் ஊற்றுவதற்கு பயன்படுத்தப்படும் கூம்பு அளவை, பால் ஊற்றுவதற்கு பயன்படுத்தும் அளவி ஆகியவற்றை 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தொழிலாளா் முத்திரை ஆய்வாளரிடம் காட்டி முத்திரையிட்டுக்கொள்ள வேண்டும். முத்திரையில் தேதி, மாதம், ஆண்டு ஆகியவை இருக்கும். அப்படி இல்லாத எடைக்கருவிகளை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படும் என்றனா்.