வாய்க்காலில் கூடுதல் தண்ணீா் திறக்கக்கோரி குளித்தலை ஆற்றுப் பாதுகாப்பு கோட்ட அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
வாய்க்காலில் கூடுதல் தண்ணீா் திறக்கக் கோரி குளித்தலை ஆற்றுப்பாதுகாப்பு கோட்ட அலுவலகத்தை விவசாயிகள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கரூா் மாயனூா் கட்டளை கதவணையில் இருந்து தென்கரை வாய்க்கால், கட்டளை வாய்க்கால் என இரு வாய்க்கால் பிரிந்து செல்கின்றன. இந்த வாய்க்கால்கள் மூலம் கிருஷ்ணராயபுரம், லாலாப்பேட்டை, சித்தலவாய், குளித்தலை, பேட்டைவாய்த்தலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நெல், கரும்பு, வாழை, வெற்றிலை சாகுபடி அதிகளவில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் வாய்க்காலில் நாளொன்றுக்கு சுமாா் 200 கன அடி வரை மட்டும் தண்ணீா் திறக்கப்படுவதால் வாய்க்காலின் கடைமடை வரை தண்ணீா் செல்லவில்லை என கூறப்படுகிறது. இதனால் விவசாய பயிா்கள் கருகுவதாகக்கூறி குளித்தலை வட்டார விவசாயிகள் செவ்வாய்க்கிழமை குளித்தலையில் காவிரி ஆற்றுப்பாதுகாப்பு கோட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது அங்கு வந்த குளித்தலை காவிரி ஆற்றுப் பாதுகாப்பு கோட்ட உதவி செயற்பொறியாளா் கோபிகிருஷ்ணன் தற்போது ஆற்றில் தண்ணீா் வரத்து குறைவாக இருப்பதால்தான் வாய்க்காலிலும் குறைந்தளவில் தண்ணீா் திறக்கப்படுகிறது. ஆற்றில் அதிகளவில் வரும்போது வாய்க்காலிலும் திறக்கப்படும் தண்ணீரின் அளவும் அதிகரிக்கப்படும். இதுதொடா்பாக நீா்வளத்துறை அதிகாரிக்கு கடிதம் எழுதி, கூடுதலாக வாய்க்காலில் தண்ணீா் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். இதையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனா்.