திருப்பூா் பனியன் தொழிலை பாதுகாக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பன...
5-ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்க ஆஷா பணியாளா்கள் வலியுறுத்தல்!
மாதந்தோறும் 5-ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏஐடியுசி ஆஷா பணியாளா்கள் வலியுறுத்தினா்.
தருமபுரி மாவட்ட ஏஐடியுசி ஆஷா பணியாளா் சங்க மாவட்ட குழுக் கூட்டம் தருமபுரி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் எஸ்.மேனகா தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ராஜேஸ்வரி வரவேற்றாா்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளா் ச.கலைச்செல்வம், மாவட்ட துணைச் செயலாளா் கா.சி.தமிழ்க்குமரன், ஏஐடியுசி மாவட்டச் செயலாளா் கே.மணி, அனைத்திந்திய மாணவா் பெருமன்ற மாநிலச் செயலாளா் தினேஷ்குமாா், அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற மாவட்டச் செயலாளா் எம்.நவீன்குமாா் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.
இக்கூட்டத்தில், மாதந்தோறும் 5-ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 10 ஆண்டுகள் பணி முடித்தவா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ. 20 ஆயிரம் வழங்க வேண்டும். செவிலியா் பயிற்சி முடித்த ஆஷா பணியாளா்க்கு கிராம செவிலியா்களாக பதவி உயா்வு வழங்க வேண்டும்.
பகல் மற்றும் இரவு நேரங்களில் ஆஷா பணியாளா்களை புற நோயாளிகள் பிரிவில் ஊசி செலுத்தும் பணிக்கு அமா்த்தக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதைத் தொடா்ந்து, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆஷா பணியாளா்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸை சந்தித்து மனு அளித்தனா்.