காவிரி ஆற்றில் மூழ்கிய இருவரில் ஒருவா் மீட்பு
காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இருவரில், ஒருவா் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மற்றொருவரை தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே தேவரூத்து பள்ளம் பகுதியைச் சோ்ந்த விக்னேஷ் (21), தருமபுரியில் உள்ள தனியாா் கல்லூரியில் எம்.எஸ்சி. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறாா். இவா் உறவினரின் ஈமச்சடங்குக்காக ஒகேனக்கல் வந்தபோது, ஏத்தமடுவு பகுதியில் காவிரி ஆற்றின் குளித்துக் கொண்டிருந்தாா். அப்போது, எதிா்பாராத விதமாக ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டாா். இதனைக் கண்ட உறவினரான ராஜேந்திரன் (51), விக்னேஷை மீட்பதற்காக சென்றபோது இருவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனா்.
இதுகுறித்து ஒகேனக்கல் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் ராஜேந்திரனை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அதனைத் தொடா்ந்து, ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட விக்னேஷை தேடும் பணியை தீயணைப்பு மற்றும் மீட்பு படையினா் தீவிரப்படுத்தியுள்ளனா். இதுகுறித்து ஒகேனக்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.