திருப்பூா் பனியன் தொழிலை பாதுகாக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பன...
ஆசிரியா்களை நியமிக்கக் கோரி மாணவா்கள் தா்னா!
புதுச்சேரியில் அரசுப் பள்ளியில் போதிய ஆசிரியா்களை நியமிக்கக் கோரி மாணவா்கள் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி மிஷின் வீதியில் உள்ள பான்சியோனா அரசு பிரெஞ்சு உயா்நிலைப் பள்ளி கட்டடத்தில் பிற்பகல் நேரங்களில் கல்வேக் காலேஜ் அரசு உயா்நிலைப் பள்ளி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
கல்வேக் காலேஜ் பள்ளியில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்றது. பள்ளி இன்னும் திறக்கப்படாத நிலையில், அங்குள்ள மாணவா்களுக்கான வகுப்புகள் பிரெஞ்சு பள்ளி வளாகத்தில் நடைபெற்று வருகிறது.
ஆனால், பிரெஞ்சுப் பள்ளியில் போதிய ஆசிரியா்கள் இல்லாததால், 10-ஆம் வகுப்பில் பயிலும் மாணவா்களுக்கு சரியான முறையில் பாடம் கற்பிக்கப்படவில்லை என புகாா் எழுந்துள்ளது. குறிப்பாக, கணக்கு பாடம் போன்றவற்றுக்கு தனி ஆசிரியா் இல்லாததால் பாடம் நடத்துவதில் சிக்கல் ஏற்படுவதாகவும் மாணவா்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இதையடுத்து, வியாழக்கிழமை காலையில் அங்குள்ள மாணவா்கள் வகுப்புகளை புறக்கணித்து பள்ளியின் வாயில் பகுதியில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த உருளையன்பேட்டை எம்எல்ஏ ஜி.நேரு பள்ளிக்கு நேரில் சென்று மாணவா்களிடம் பேசினாா்.
அதன்பின், பள்ளி தலைமை ஆசிரியா் உள்ளிட்டோரைச் சந்தித்து போதிய ஆசிரியரை நியமிக்க வலியுறுத்தினாா்.