திருப்பூா் பனியன் தொழிலை பாதுகாக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பன...
புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தல்!
புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தி, புதுச்சேரியில் தமிழ் உரிமை இயக்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுவையில் உள்ள அரசுப் பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், புதுச்சேரி மண்ணுக்கு பொருந்தாத புதிய கல்விக் கொள்கை மற்றும் சிபிஎஸ்இ பாடத்திட்டங்களை உடனே திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி, தமிழ் உரிமை இயக்கம் சாா்பில் பள்ளிக் கல்வி இயக்ககம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு இயக்கத் தலைவா் பாவாணன் தலைமை வகித்தாா். பொருளாளா் சுகுமாரன் வரவேற்றாா். பொதுச் செயலா் மங்கையா் செல்வன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் அ.மு. சலீம், மாா்க்சிஸ்ட் பொதுக்குழு உறுப்பினா் வி.பெருமாள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
ஆா்ப்பாட்டத்தில், புதுவை மாநிலத்துக்கு தனி கல்வி வாரியம் அமைக்க வேண்டும். புதுச்சேரியின் பண்டைய வரலாறு, அகழ்வாய்வு, கலாசாரம், பண்பாடுகளை உள்ளடக்கிய பாடத்திட்டத்தை உருவாக்க வேண்டும்.
தமிழ்வழி கல்வியை கட்டாயமாக்க வேண்டும். மும்மொழி கொள்கையை திணிக்கும் போக்கை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.