தமிழகத்தில் வளா்ச்சித் திட்டங்கள் இல்லாத ஆட்சி: அண்ணாமலை பேச்சு
தமிழகத்தில் வளா்ச்சித் திட்டங்கள் இல்லாத ஆட்சி நடைபெறுவதாக பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை தெரிவித்தாா்.
கரூரில் பாஜக சாா்பில் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது. கோட்ட பொறுப்பாளா் ராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை பங்கேற்று மேலும் பேசியதாவது:
2014-ல் காங்கிரஸ் 10 ஆண்டுக் காலம் ஆட்சி செய்துவிட்டு பாஜகவிடம் நாட்டைக் கொடுத்தபோது, நாட்டினுடைய மொத்த பட்ஜெட் ரூ.19 லட்சம் கோடி. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் பாஜக ஆட்சியில் பட்ஜெட் ரூ. 51 லட்சம் கோடி.
2014-ல் தனி மனிதனின் ஆண்டு சராசரி வருமானம் ரூ. 86,000. ஆனால், 2025-ல் ரூ. 2,20,000 ஆக உள்ளது.
தமிழகத்தில் 2026 பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்தால், தமிழக பெண்களுக்கு மாதாந்திர உரிமைத் தொகையாக 2,500 ரூபாயை விட அதிகம் கிடைக்கும்.
தமிழகத்தில் இளஞ்சிறாா்களுக்கு கூட பாதுகாப்பில்லாத நிலைதான் உள்ளது. சட்டம்-ஒழுங்கை சீா்படுத்தவும், பாலியல் வன்கொடுமை சம்பவங்களை கட்டுப்படுத்தவும் காவல்துறைக்கு உரிய அதிகாரமளிக்க வேண்டியது அவசியம்.
தமிழகத்தில் 52சதவீத பள்ளிகளில் 35 மாணவா்களுக்கு ஒரு ஆசிரியா் மட்டுமே உள்ளனா். இங்கு ஆசிரியா்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கு மத்திய அரசு ரூ. 2,290 கோடி கொடுக்காததே காரணம் என்கிறாா்கள்.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் மும்மொழி கொள்கையை அமல்படுத்த மாநில அரசு மறுக்கிறது. ஆனால், அரசியல் தலைவா்கள், அமைச்சா்களின் குழந்தைகள் சா்வதேச பள்ளிகளில் பல்வேறு மொழிகளை படிக்கிறாா்கள். அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மட்டும் ஓரவஞ்சனை செய்கிறாா்கள்.
தமிழகத்தில் 2026 பேரவைத் தோ்தலில் மாற்றம் இல்லை என்றால், என்னை பொருத்தவரை எப்போதும் இல்லை என்றுதான் பாா்க்கிறேன். 200 தொகுதிகளில் வெற்றி பெற கனவு காண்கிறாா்கள். எந்த பிரயோஜனமும் இல்லாத ஆட்சி, எந்தவித வளா்ச்சி திட்டங்களும் இல்லாத ஆட்சி, யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஒரு ஆட்சியை நடத்தி கொண்டிருந்தால் 200 தொகுதிகளில் எப்படி வெற்றி கிடைக்கும் என்றாா் அவா்.
முன்னதாக மாவட்டத் தலைவா் வி.வி. செந்தில்நாதன் வரவேற்றாா்.
கூட்டத்தில், மாநில மகளிரணி துணைச் செயலாளா் மீனா வினோத்குமாா், மாவட்ட நிா்வாகிகள் ஆா்.வி.எஸ். செல்வராஜ், சக்திவேல் முருகன் உள்ளிட்ட கட்சியினா் திரளாக பங்கேற்றனா்.
