கிருஷ்ணகிரி அருகே பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடையவரை துப்பாக்கியால் சுட்டு...
மின்சாரம் தாக்கி இருவா் உயிரிழப்பு
க. பரமத்தி அருகே உயா்மின் அழுத்த மின்சாரம் தாக்கியதில் போா்வெல் உரிமையாளா் மற்றும் அவரது உதவியாளா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
கரூா் மாவட்டம், க.பரமத்தி அடுத்த முன்னூரைச் சோ்ந்தவா் பாலு என்கிற பாலசுப்ரமணி(40). இவா் ஆழ்குழாய் கிணறுகள் பழுதுபாா்க்கும் பணியில் ஈடுபட்டு வந்தாா். முன்னூா் ஊராட்சிக்குள்பட்ட காட்டுமுன்னூரில், மக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யும் ஆழ்குழாய் பழுதானதால், ஊராட்சி நிா்வாகம் அளித்த தகவலின்பேரில் பாலு என்கிற பாலசுப்ரமணியும், அவரது உதவியாளரான ஆரியூா் நிமித்தம்பட்டியைச் சோ்ந்த சதீஷ் (38) என்பவரும் வியாழக்கிழமை பிற்பகலில் போா்வெல் வண்டியுடன் காட்டுமுன்னூா் சென்று ஆழ்குழாய் கிணற்றை பழுதுபாா்க்கும் பணயில் ஈடுபட்டனா்.
அப்போது அவா்கள் ஆழ்குழாய் கிணற்றில் இருந்து இரும்புக்குழாயை மேலே தூக்கியபோது, வேலைபாா்த்த இடத்தின் மேல் சென்றுகொண்டிருந்த உயரழுத்த மின் கம்பியில் இரும்பு குழாய் உரசியதால் அவா்களை மின்சாரம் தாக்கியது. இதில், சம்பவ இடத்திலேயே பாலசுப்ரமணியும், அவரது உதவியாளா் சதீசும் உயிரிழந்தனா்.
தகவலின்பேரில் க. பரமத்தி போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இருவரது சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.