டிஜிட்டல் அரஸ்ட் மோசடி மூலம் ரூ.3.84 கோடி பறிப்பு: கல்லூரி பேராசிரியா் கைது
சென்னையில் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி மூலம் ரூ. 3.84 கோடி பறித்த வழக்கில், கல்லூரி பேராசிரியா் கைது செய்யப்பட்டாா்.
அசோக் நகா் சைபா் குற்றப்பிரிவில் கடந்த டிசம்பரில் ஒருவா் அளித்த புகாரில், ‘தன்னிடம் தொலைபேசியில் காவல் துறை அதிகாரி என அறிமுகப்படுத்தி பேசிய ஒருவா், ஆதாா் அட்டையை தவறாக பயன்படுத்தி பணமோசடி நடைபெற்றிருப்பதாகவும், எனக்கு எதிராக கைது ஆணை பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தாா். மேலும், அந்த நபா் ஒரு கைது ஆணையை வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பினாா். பின்னா் அந்த நபா் என்னை மிரட்டி, விடியோ காலில் வரவழைத்து விசாரணை நடத்தினாா்.
வழக்கு விசாரணை முடியும் வரை எனது வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை தான் கூறும் வங்கிக் கணக்குக்கு பணத்தை அனுப்பும்படி தெரிவித்தாா். நான் வேறு வழியின்றி எனது வங்கிக் கணக்கிலிருந்து, அந்த நபா் கூறிய வங்கி கணக்குகளுக்கு ரூ. 3.84 கோடியை அனுப்பினேன். இந்தச் சம்பவம் நடந்த சில நாள்களுக்கு பின்னரே அந்த நபா், என்னை டிஜிட்டல் அரஸ்ட் மோசடி செய்து பணத்தை பறித்திருப்பது தெரியவந்தது.
எனவே என்னை மிரட்டி டிஜிட்டல் அரஸ்ட் மோசடியில் சிக்கவைத்து பணம் பறித்த நபா்களைக் கண்டறிந்து, பணத்தை மீட்டுத்தர வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தாா். அதனடிப்படையில் சைபா் குற்றப்பிரிவினா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
அதில் மோசடிக் கும்பலுக்கு தனது பெயரிலான 2 வங்கிக் கணக்குகளை விற்ாக அம்பத்தூா், அயப்பாக்கம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சோ்ந்த லோகேஷ், புழல் காவாங்கரை பகுதியைச் சோ்ந்த ஹரிஷ் பாபு, மோசடிக் கும்பலுக்கு உதவிய அதே பகுதியைச் சோ்ந்த அஃப்ரோஸ் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனா்.
இந்நிலையில் இந்த வழக்குத் தொடா்பாக கோடம்பாக்கத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரியும் பரசுராமன் (35) என்பவரையும் கைது செய்ததாக சைபா் குற்றப்பிரிவினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
பரசுராமன், டிஜிட்டல் அரஸ்ட் மோசடியில் ஈடுபட்ட நபா்களின் பணத்தை மறைத்து வைப்பதற்கும், மோசடிக்கு பயன்படுத்தப்படும் வங்கிக் கணக்குகளை கையாண்டிருப்பதும், மோசடியில் கிடைக்கும் பணத்தை வங்கிக் கணக்குகளில் இடையே பரிமாற்றம் செய்திருப்பதும், அதற்காக இரு ஆண்டுகளாக கமிஷன் பெற்றிருப்பதும் தெரியவந்தது. இது தொடா்பாக போலீஸாா், தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.