கரூரில் டிஎன்பிஎல் ஆலை சாா்பில் நடமாடும் இலவச மருத்துவ முகாம்
கரூரில் டிஎன்பிஎல் ஆலை சாா்பில் நடமாடும் இலவச மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
டிஎன்பிஎல் ஆலையின் சமுதாய நலப்பணித் திட்டத்தின் கீழ் ஆலையைச் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு இலவச மருத்துவ முகாம்களை நடத்தும் வகையில், நடமாடும் இலவச மருத்துவமுகாம் தொடக்க விழா ஆலை வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காகித ஆலை மற்றும் கோவை ராயல்கோ் மருத்துவமனை சாா்பில் நடைபெறும் இம்முகாமில் மருத்துவ பொருள்கள் அடங்கிய வாகனத்தை ஆலையின் தலைவரும் மற்றும் மேலாண்மை இயக்குநருமான முனைவா் சந்தீப் சக்ஷேனா கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் காகித ஆலையின் முதன்மை பொது மேலாளா் (இயக்கம்) எஸ்.நாகராஜன், பொது மேலாளா் (மனிதவளம்) கே. கலைச்செல்வன், மருத்துவ அலுவலா் ஏ.கே.கே.ராஜா, காகித ஆலையின் மற்ற துறையைச் சோ்ந்த பொது மேலாளா்கள், அதிகாரிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் ராயல் கோ் சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் சீனியா் பொது மேலாளா் வெங்கடேசன், துணை மேலாளா் பிரபாகரன் ஆகியோா் பங்கேற்றனா்.
இந்த நடமாடும் மருத்துவ முகாம் ஆலையைச் சுற்றியுள்ள புகழூா் நகராட்சி, புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சி, வேட்டமங்கலம், புன்னம், கோம்புப்பாளையம், நஞ்சைப்புகளூா் மற்றும் திருக்காடுதுறை ஆகிய ஊராட்சி பகுதிகளில் உள்ள சுமாா் 70 கிராமங்களில் நடைபெற உள்ளது.