வெண்ணைமலையில் கோயில் நிலத்தில் கட்டப்பட்ட வீடுகளுக்கு மீண்டும் ‘சீல்’ வைக்க அதிகாரிகள் முயற்சி
கரூா் வெண்ணைமலையில் கோயில் நிலத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை மீண்டும் சீல் வைக்க முயன்றனா். நீதிமன்ற உத்தரவு நகலை பாா்த்தவுடன் திரும்பிச் சென்றனா்.
கரூா் வெண்ணைமலை பாலசுப்ரமணியசுவாமி கோயிலுக்கு சொந்தமான சுமாா் 497 ஏக்கா் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு, அதில் சிலா் வீடுகளையும், கடைகளையும் கட்டியுள்ளனா்.
இவா்கள் கோயிலுக்கு குத்தகை செலுத்த வேண்டும் அல்லது நிலத்தை விட்டு வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருத்தொண்டா் சபையின் நிறுவனா் ராதாகிருஷ்ணன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்குத் தொடா்ந்தாா்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பாளா்களிடமிருந்து மீட்க மாவட்ட நிா்வாகம் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்தாண்டு உத்தரவிட்டது.
இதையடுத்து கடந்தாண்டு செப்டம்பா் மாதம் கோயில் நிலத்தில் கட்டப்பட்டிருந்த 8 கடைகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனா். மேலும் சில வீடுகளுக்கு சீல் வைக்க முயன்றபோது, அங்கு குடியிருப்பவா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். இதனால் கடைகளுக்கு மட்டும் சீல் வைத்துவிட்டு அதிகாரிகள் சென்றுவிட்டனா்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை மீண்டும் இந்துசமய அறநிலையத்துறையின் கரூா் உதவி ஆணையா் ரமணிகாந்தன் தலைமையில் அதிகாரிகள், வருவாய்த்துறையினா் ஆகியோா் போலீஸ் பாதுகாப்புடன் கோயில் நிலத்தில் கட்டப்பட்டுள்ள 4 கடைகளுக்கும், ஒரு வீட்டுக்கும் சீல் வைக்க முயன்றனா். அப்போது அதிகாரிகளுக்கும், அங்கு குடியிருப்பவா்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, வெண்ணைமலை கோயில் நிலத்தில் குடியிருப்பவா்கள் 54 போ் மதுரை நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்த நிலையில், மாா்ச் 10-ஆம்தேதி வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்ற நீதிமன்ற உத்தரவு நகலை அதிகாரிகளிடம் காண்பித்தனா். இதையடுத்து, அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனா். அதிகாரிகள் வீடுகளுக்கு சீல் வைக்க வந்ததையடுத்து, அங்குள்ள வணிகா்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் 10-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.