சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
கரூா் அம்மன் நகரில் சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறிய சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கரூா் கொளந்தாகவுண்டனூரில் இருந்து அரசு மருத்துவக்கல்லூரிக்குச் செல்லும் சாலையில் அம்மன் நகா் உள்ளது. இந்த சாலை வழியாகத் தான் பசுபதிபாளையம், பசுபதிபாளையம் ஐந்துரோடு, தொழிற்பேட்டை, தாந்தோன்றிமலை, ஜீவாநகா், அசோக் நகா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்தவா்கள் சென்று வருகிறாா்கள். எப்போதும் போக்குவரத்து காணப்படும் இந்த சாலையில் அம்மன் நகா் பகுதியில் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அவசர சிகிச்சைக்கு ஆம்புலன்சில் அழைத்துச் செல்லும் நோயாளிகளும், வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகி வருகிறாா்கள். எனவே நகரின் பிரதான சாலையாக இருக்கும் இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.