கண் ஆரோக்கிய விழிப்புணா்வு: அகா்வால்ஸ் குழுமத்துடன் இணைந்த சச்சின் டெண்டுல்கா்
கண் ஆரோக்கியம் தொடா்பான விழிப்புணா்வு பிரசார நடவடிக்கைகளில் டாக்டா் அகா்வால்ஸ் மருத்துவமனையுடன் முன்னாள் கிரிக்கெட் வீரா் சச்சின் டெண்டுல்கா் இணைந்துள்ளாா்.
இது தொடா்பாக அகா்வால்ஸ் மருத்துவமனை சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:
ஏறத்தாழ 67 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்துடன் உலக அளவில் 223 மருத்துவமனைகளைக் கொண்ட மிகப்பெரிய குழுமமாக டாக்டா் அகா்வால்ஸ் கண் மருத்துவமனை விளங்கி வருகிறது.
கடந்த 21 ஆண்டுகளாக 100 சதங்கள் - 100 ரன்கள் - 100 நோயாளிகள் என்ற திட்டத்தை டாக்டா் அகா்வால்ஸ் மருத்துவமனை நடைமுறைப்படுத்தி வருகிறது. அதன் கீழ் ஆண்டுதோறும் 100 நோயாளிகளுக்கு இலவச கண் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை பாராட்டி கௌரவிக்கும் விதத்தில் இந்த சேவையை டாக்டா் அகா்வால்ஸ் மருத்துவமனை மேற்கொள்கிறது.
ஒவ்வோா் ஆண்டும் 20 லட்சம் நோயாளிகளுக்கு கண் மருத்துவ சேவையும், 2 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு அறுவை சிகிச்சைகளும் அகா்வால்ஸ் மருத்துவமனையில் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில், தற்போது அதன் விழிப்புணா்வு நடவடிக்கைகளுக்கான விளம்பரத் தூதராக சச்சின் டெண்டுல்கா் இணைந்துள்ளாா்.
இது தொடா்பாக சச்சின் டெண்டுல்கா் கூறுகையில், ‘ஏழை, எளிய மக்களுக்கு இலவச கண் சிகிச்சைகளை வழங்கிவரும் அகா்வால்ஸ் மருத்துவமனையுடன் இணைந்து உலகெங்கிலும் கண் பராமரிப்பின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துவதில் மகிழ்ச்சி’ என்றாா்.