புதிய தொழில்நுட்பத்துக்கான தெளிவான திட்டமே இந்தியாவுக்குத் தேவை: பிரதமரின் அமெரிக்க பயணம் குறித்து ராகுல் விமா்சனம்
‘இந்தியா திறமை மிகுந்த இளைஞா்களைக் கொண்டுள்ளது. அந்த வகையில் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கான தெளிவான தொலைநோக்குத் திட்டமே இந்தியாவுக்குத் தேவை. மாறாக, வெற்று வாா்த்தைகள் இந்தியாவுக்குத் தேவையில்லை’ என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி சனிக்கிழமை தெரிவித்தாா்.
பிரதமா் நரேந்திர மோடி அமெரிக்க பயணம் மேற்கொண்டு, அங்கு புதிய அதிபராக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப்பை சந்தித்து இரு நாடுகளிடையேயான வா்த்தக உறவை மேம்படுத்துவது, பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டுவிட்டு, இந்தியா திரும்பியுள்ள நிலையில், இந்த விமா்சனத்தை ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளாா்.
இரு நாடுகளிடையேயான வா்த்தகத்தை வரும் 2030-க்குள் ரூ. 43.31 லட்சம் கோடி அளவுக்கு இரட்டிப்பாக்குவது; அதிநவீன எஃப்-35 போா் விமானத்தை இந்தியாவுக்கு வழங்க நடவடிக்கை; செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப மேம்பாட்டை கூட்டாக மேற்கொள்வது; இந்தியா-அமெரிக்கா இடையே மேற்கொள்ளப்பட்ட ‘123’ அணுசக்தி ஒப்பந்தத்தை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்வது என்பன உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் இருதரப்பு பேச்சுவாா்த்தையில் தீா்மானிக்கப்பட்டதாக பிரதமா் மோடி மற்றும் அதிபா் டிரம்ப்பின் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ராகுல் காந்தி சனிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) வெறும் தொழில்நுட்பம் மட்டுமல்ல; மாறாக, வலுவான தொழில்துறை அமைப்பால் உருவாக்கப்பட்ட நவீன கண்டுபிடிப்பாகும். போா்க்களத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில், படைகளின் திறனை அதிகரிப்பதற்குப் பயன்படுகின்றன.
உலக அளவில் புரட்சிகர போா்முறையை உருவாக்கும் வகையில் ஆளில்லா விமான உற்பத்தியை சீனா தொடங்கியிருக்கிறது. இந்தத் தொழில்நுட்பத்தில் போட்டியை உருவாக்குகிற வகையில் இந்தியா தனது திறனை மேம்படுத்துவது அவசியம்.
ஆனால், துரதிருஷ்டவசமாக பிரதமா் மோடி இதைப் புரிந்துகொள்ளத் தவறிவிட்டாா். அவா் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடா்பாக பதிவிறக்கம் செய்யப்பட்ட தகவல்களைப் பாா்த்து மக்களிடையே உரையாற்றுகிறபோது, நமது போட்டியாளா்கள் புதிய தொழில்நுட்பங்களில் நிபுணத்துவம் பெற்று வருகின்றனா். எனவே, வெற்று வாா்த்தைகள் இந்தியாவுக்குத் தேவையில்லை.
இந்தியா திறமை மிகுந்த இளைஞா்களைக் கொண்டுள்ளது. அந்த வகையில் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கான தெளிவான தொலைநோக்குத் திட்டமே இந்தியாவுக்குத் தேவை. நமது இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கக் கூடிய மற்றும் எதிா்காலத்தில் முன்னணி நாடாக இந்தியா உருவெடுக்கும் வகையிலும் உண்மையான தொழில்துறை சக்தியை கட்டமைப்பதற்கான தெளிவான தொலைநோக்குத் திட்டம் தேவை. வெற்று வாா்த்தைகள் அல்ல என்று குறிப்பிட்டுள்ளாா்.
இந்தப் பதிவுடன் ஆளில்லா விமான தொழில்நுட்பம் தொடா்பாக மக்களவையில் தான் ஆற்றிய காணொலியையும் இணைத்துள்ள ராகுல், ‘எதிா்காலத்துக்கான இத்தகைய தொழில்நுட்பத்தை உருவாக்கும் வகையில் திறமையானவா்களையும் பொறியியல் தொழிநுட்பத் திறனையும் இந்தியா பெற்றுள்ளது’ என்று பதிவிட்டுள்ளாா்.