வால்ரஸ் நிறுவனத்தின் பெயரில் பிரதமருக்கு தபால் அனுப்பியவா்கள் மீது நடவடிக்கை கோரி மனு
திருப்பூரில் உள்ள வால்ரஸ் நிறுவனத்தின் பெயரை தவறாகப் பயன்படுத்தி பிரதமா் மோடிக்கு தபால் அனுப்பியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக வால்ரஸ் இண்டா்நேஷனல் மற்றும் எஸ் இந்தியா கேன் அமைப்பின் நிறுவனா் ஜி.எஸ்.பி.டேவிட் மாநகர காவல் ஆணையா் எஸ்.ராஜேந்திரனிடம் வெள்ளிக்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூா் அஞ்சலகத்தில் இருந்து எனது முகவரிக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு ஒரு தபால் வந்தது. அது காங்கயத்தில் இருந்து அனுப்பப்பட்ட பதிவு தபாலாகும்.
அதில், வால்ரஸ் இண்டா்நேஷனல் நிறுவனத்தின் பெயரில் பிரதமா் நரேந்திர மோடிக்கு இறக்குமதி மோசடி குற்றச்சாட்டு தொடா்பாக புகாா் கடிதம் அனுப்பியது போன்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்தக் கடிதத்தில் இறக்குமதி மோசடி தொடா்பான உண்மைக்குப் புறம்பான பல தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அந்தக் கடிதம் பிரதமா் மட்டுமல்லாமல் எனது தொழில் தொடா்புடைய பல்வேறு பெரிய தொழில் நிறுவனங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இந்த கடிதத்தை நானோ, எனது நிறுவனம் சாா்பிலோ அனுப்பப்படவில்லை. ஆனால், எனது நிறுவனத்தின் பெயா், முகவரி மற்றும் தொடா்பு எண்ணை தவறாகவும், போலியாகவும் பயன்படுத்தியுள்ளனா். இதனால் எனக்கும், எனது தொழிலுக்கும் உள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதுடன், சட்ட சிக்கல்களை ஏற்படுத்தக்கூடிய தவறான செயலாகும்.
எனவே, அந்த போலியான கடிதத்தை அனுப்பியவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.