மாவட்டத்தில் ரூ.46,004.98 கோடி கடன் வழங்க திட்ட அறிக்கை வெளியீடு
திருப்பூா் மாவட்ட முன்னோடி வங்கி சாா்பில் 2025-26 -ஆம் நிதியாண்டில் ரூ.46,004.98 கோடிக்கு கடன் வழங்க திட்ட அறிக்கை வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 2025-26-ஆம் நிதியாண்டுக்கான கடன் திட்ட அறிக்கையை ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டு பேசியதாவது: திருப்பூா் மாவட்ட முன்னோடி வங்கி சாா்பில் ஆண்டுதோறும் ஆண்டு கடன் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது.
அதன்படி, 2025-26- ஆம் நிதியாண்டில் முன்னுரிமை கடன்களுக்கான மொத்த திட்ட இலக்கு ரூ.46,004.98 கோடி என்று நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில், வேளாண்மைத் துறைக்கு ரூ.11,667.67 கோடி, சிறு வணிகத் துறைக்கு ரூ.25,180.76 கோடி, ஏற்றுமதி கடன் ரூ.984.75 கோடி, கல்விக் கடன் ரூ.307.20 கோடி, வீட்டுக் கடன் ரூ.955.88 கோடி, மரபுசாரா எரிசக்தி கடன் ரூ.788.07 கோடி, சுய உதவிக்குழு மற்றும் இதர கடன்களுக்கு ரூ,3,557.41 கோடி, சமூக உட்கட்டமைப்புக்கு ரூ.2,554.21 கோடி இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இது கடந்த ஆண்டு கடன் திட்ட அறிக்கையைக் காட்டிலும் ரூ.6,987.29 கோடி கூடுதலாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா்.
இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) சாம் சாந்தகுமாா், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் துா்கா பிரசாத், நபாா்டு வங்கியின் மாவட்ட வளா்ச்சி மேலாளா் அசோக்குமாா், மாவட்ட முன்னோடி அலுவலா் இந்திய ரிசா்வ் வங்கி வம்சிதா் ரெட்டி, வங்கியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.